உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வண்ணனை மொழிநூல்

19

கன்னடருக்கும் வருத்தம் பிறக்கும். ஆதலால், கோமுட்டிச் செட்டிபோல் இருசாரார்க்கும் பொதுவாகக் கூறுவது சிறந்தமுறை என்பது, வண்ணனை மொழி நூலார் கருத்து. இம்முறையொட்டிச் சில தமிழ்ப் பேராசியரும், திரவிடம் என்பது, தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய பல மொழிகளின் தொகுதிப் பெயர். அவையெல்லாம் ஓரினமொழிகள் என்று கொள்வதல்லது. தமிழ் பிற திரவிட மொழிகளின் தாயெனக் கூறுவது பொருந்தாது,” எனக் கட்டுரைப்பர்.

தனிப்பட்டவர் செய்திகளில் ஒருவர், ஒருவர் குற்றங்குறைகளை மறைக்கலாமேயன்றி, ஒரு நாட்டு மக்களெல்லார்க்கும் பொதுவான மொழித் துறையிலும் கலைத்துறையிலும் குற்றங்குறைகளை மறைப்பது பண்பாடன்று. 7. இலக்கணத்தைப் பழிப்பது

எல்லா முதுமொழிகளிலும் இலக்கண நூல்கள் அழகிய முறையில் அறிஞரால் இயற்றப் பெற்றுள்ளன. அங்ஙனமிருப்பினும், அவற்றின் அருமையறியாது, அவற்றை வரைதுறையின்றிப் பழித்து, மாணவரை மயக்குவனவும் பொருட்சிறப்பற்றனவும் ஓரீறு கொண்டனவும் ஒன்றை யொன்று பற்றுவனவுமான பல குறியீடுகளைப் புதிதாய்ப் படைத்து அவற்றைச் செவ்வையாய் விளக்கவும் இயலாது இடர்ப்படுவது, வண்ணனை மொழிநூலாசிரியர் வழக்கமாக இருந்து வருகின்றது. இது மிகப்பரந்த செய்தியாதலின், இதை விரிக்காது இம்மட்டில் நிறுத்துகின்றேன்.

8. ஒலிக்குறிகளை (Phonetic Symbols) அளவைப் படுத்தாதது

வண்ணனைமொழி நூலாரால் ஒப்புக்கொள்ளப்பெறும் பல எழுத் தொலி நூல்கள், வெவ்வேறு குறிகளைக் கையாண்டுள்ளன. அவற்றை இன்னும் ஒரு நெறிப்படுத்தியிலர்.

ஒருவர் எல்லா மொழிகளையும் தாய்மொழியாகவுடையார் போன்றே பேசவியலும் என்பது, வண்ணனை மொழி நூற்கொள்கையர் தருக்கு. ஆயின், இதுகாறும் ஒருவரும் அதனை மெய்பித்துக் காட்டியிலர்.

9. கிளை வழக்கைப் பெருக்குவது

இடவழக்கும் குலவழக்கும் பற்றி ஒவ்வொரு பெருமொழியிலும் சில கி ளைவழக்குகள் (Dialects) ஏற்படுவது இயல்பே. ஆயின், ஞாலவியற் கிளைவழக்கு (Geographical Dialect) என்றும், ஊர்க்கிளை வழக்கு (Dialect of a village town or city) என்றும், கூட்டரவியற் கிளைவழக்கு, (Social Dialect) என்றும், குடும்பக் கிளை வழக்கு (Familly Dialect) என்றும், தனிப்பட்டவர் கிளைவழக்கு (Individual Dialect) என்றும், வண்ணனைமொழி நூலார் வரம்பின்றி வகுத்துக்காட்டுவது வியப்பினும் வியப்பே.

10. பேசுவதே மொழி என்பது

பேச்சு வழக்கிலுள்ளதே உண்மையான மொழியென்றும், எழுத்து வழக்கிலுள்ளதெல்லாம் ஏட்டு மொழியேயென்றும், திருந்திய வழக்கென்றும் காச்சை வழக்கென்றும் வேறுபாடில்லையென்றும், கொச்சை வழக்கு