உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திரவிடம் தென்சொல்லின் திரிபே

77

அவ்வாறு புணர்ந்ததாகவும், கொள்ளவேண்டி வருமாதலின், அது பொருந்தாதென விடுக்க. தமிழ் என்னும் சொல் முதலாவது வடமொழியில் திரிந்த வடிவம் த்ரமிளம் என்பதே. ழகரம் வட மொழியிலின்மையாலும், உயிர்மெய்ம் முதலை மெய்ம்முதலாக்கி ரகரத்தை வழிச் செருகல் அம் மொழிக்கியல்பாதலானும், அச்சொல் அம்மொழியில் அவ்வடிவை அடைந்த தென்க. திரமிளம் என்பது தமிழ் எனத் திரிதலுமது என்று பிரயோக விவேக நூலார் (பக். 4) தலைகீழாகக் கூறிய கூற்றில், அவ்வடிவே ஆளப் பெறுதல் காண்க. கால்டுவெல். புராணங்களின் பழைய மலையாளமொழி பெயர்ப்பு களிலெல்லாம் இவ்வடிவே பெருவழக்காயிருப்பதாகக் குண்டர்ட்டுக் கூறுவதாகவும் அவர் எடுத்துரைப்பர். திரமிளம் என்னும் சொல்லிற்கு (1) பஞ்ச திரவிட தேசங்கள், (2) தமிழ் என இருபொருள் கூறும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியும்

திரமிளம் என்பது பின்பு த்ரமிடம் எனத் திரிந்தது. திமிடம் என்பதும் சிறிது காலத்தின் பின் த்ரவிடம் எனத் திரியலாயிற்று. இவ் விறுதி வடிவத்தின் நீட்சியே த்ராவிடம் என்பது. இது தமிழில் திராவிடம் என்றாகும்.

த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் என்னுஞ் ரகரஞ் செருகிய வடிவு களெல்லாம், வடமொழி வழக்கேயன்றிப் பிறமொழி அல்லது பிறநாட்டு வழக்கல்ல. பிறமொழிகளெல்லாம் தமிழிற் போல் ரகரமற்ற வடிவே வழங்கும். கி. பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த இவென் திசாங் (Hwen Thsang) என்னும் சீன வழிப்போக்கர் குறிப்பில், சிமொலொ (Tchimo - lo) என்னும் வடிவம் உள்ளது. இதைத் திமல (Dimala) அல்லது திமர (Dimara) என்றும் படிக்கலாம் என்பர் கால்டுவெல். பாலிமொழியிலுள்ள மகாவமிசம் (mahavanso) என்னும் இலங்கை வரலாற்றில் தமிலொ' (Damilo) என்னும் வடிவம் உள்ளது. ஐரோப்பியர் பொதுவாகத் தமுல் (Tamul) என்றனர். அவருள் தேனிய விடையூழியர்(Danish missionaries) மட்டும் தமுலிக்க மொழி (Lin- gua Darmulia) என அழைத்தனர். ஆங்கிலத்தில் 'தமிழ் (Tamil) என்னும் வடிவம் வழங்குகின்றது. தமிழகம் என்னும் பெயர், மேனாட்டுப் பழைய தேசப்படங்களிலும் ஞாலநூற் சுவடிகளிலும் 'தமிரிக்கெ' (Damirice) என்றும், திமிரிக்க (Dimirica) என்றும் வழங்கப்பட்டுள்ளது.

முழுகிப்போன குமரிக்கண்டத்தில் கி. மு. (ஏறத்தாழ) ஐம்பதினாயிரம் ஆண்டுகட்குமுன் முளைத்தெழுந்ததும், திரவிட மொழிகட்கெல்லாந் தாயுமான பழந்தமிழ் ஒரு காலத்தில் பனிமலை (இமயம்) வரை பரவி யிருந்ததாலும், கி. மு. 1000 ஆண்டுகட்குப் பின்னரே தெலுங்கு முதலிய திரவிட மொழிகள் அதனின்று கிளைத்ததாலும், அவற்றுள்ளும் ஒருமொழியிலும் கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இலக்கியந் தோன்றாமையாலும், திரவிடம் என்னும் பெயர் தமிழையும் தமிழினத்தையும் தமிழ் நாட்டையுமே முதற்காலத்தில் குறித்து நின்றது. தமிழினின்று திரவிட மொழிகள் கிளைத்த பின்பும், திரவிடம் என்னும் சொல் தமிழைத் தனிப்படக் குறிக்கும் வழக்கும்