உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் தகுதி

61

எந்தத் துறையிலேனும், ஆராய்ச்சி யென்பது கல்வியின் பிற் பட்டதே, கல்வியில்லாதவர் ஆராய்தல் ஒண்ணாது. ஓர் இயங்கியை (automobile) ஓட்டத் தெரிவது போன்றது கல்வி; அதனைப் பழுது பார்க்கத் தெரிவது போன்றது ஆராய்ச்சி. ஓட்டத் தெரியாதவர் பழுது பார்ப்புத் தெரிந்துகொள்ள முடியாது.

ஒரு மொழியில் அகரமுதலி தொகுப்பதற்கு, இலக்கியப் புலமை யும் இலக்கண நுண்மதியும் உலக வழக்கறிவும், சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சி யும் பரந்த கல்வியும் பல்கலைப் பயிற்சியும் வேண்டும். தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமு மாதலாலும், ஆரிய ரால் மறையுண்டும் குறையுண்டும் இருப்பதனாலும், குமரி நாட்டில் தோன்றிய உலக முதற்றாய் உயர்தனிச் செம் மொழி யாதலாலும், தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர்க்கு, மேற்கூறிய தகுதி களுடன், திரவிட ஆரிய மொழியறிவும், உண்மையை அஞ்சாதுரைக்கும் நெஞ் சுரமும் வரலாற்றறிவும், மாந்தனூல் (Anthropology) அறிவும், இன்றியமை யாதனவாகும்.

இத் தகுதிகளெல்லாம் ஒருங்குடையவராயின், இங்கிலாந்தில் சாமுவேல் சாண்சனும் (Samuel Johnson), அமெரிக்காவில் நோவா வெபுசித்தரும் (Noah Webster) தனிப்பட ஆங்கில அகரமுதலி தொகுத் தது போல், தமிழ்நாட்டிலும் தமிழர் ஒருவரே தொகுக்கலாம். அங்ஙன மன்றி, தகுதியில்லாத பலரைக் கொண்ட ஒரு குழு அமர்த்தவேண்டு மென்பது போலித்தனமான குறும்புக் கூற்றேயாகும். குழு எதற்கு? செக்குத் தள்ளவா அல்லது தேரிழுக்கவா? வேட்டையாடவா அல்லது விளையாட்டுப் போரில் வடம் பிடிக்கவா? பிடிக்கவா? பணந் தண்டவா அல்லது பாதையைச் செப்பனிடவா? அகரமுதலித் தொகுப்பிற்கும் குழுவமைப் பிற்கும் என்ன தொடர்புண்டு?

சாமுவேல் சாண்சனும் வெபுசித்தரும் போன்றார் இல்லாத காலத்திலும், எருதந்துறை ஆங்கிலப் பேரகரமுதலி (The Oxford Eng- lish Dictionary) ஒருவர்பின் ஒருவராக மர்ரே (Murray), பிராதிலி (Bradley), கீரேகி (Craigie), ஆனியன்சு (Onions) என்னும் நால்வரின் தனிப்பட்ட தலைமையிலன்றோ தொகுக்கப்பட்டு வந்தது? அத்தகைய தகுதியுள் ளவர் யார்? கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரெல்லாம் தமிழ் அகரமுதலித் தொகுப்பாளரெனின், கல்லூரி ஆங்கிலப் பேராசிரியரெல்லாம் ஆங்கில அகரமுதலித் தொகுப்பாளர் ஆவரா? அங்ஙனமே பிறமொழிப் பேராசிரி யரெல்லாம் அவரவர் மொழி அகரமுதலித் தொகுப்பாளர் ஆவரா? சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் திருத்துதற்கு அமர்த்தப்பட்ட குழுவிலுள்ள தமிழ்ப் புலவரை நோக்கின், நரிபரியாக்கிய சிவபெருமானும் தன் திருவிளையாடல் பெருமையிழந்ததுபற்றி வருந்தத் தான் செய்வர். ஆதலால், அக்குழுவை உடனே கலைத்துவிடுவதே அதிகாரிகட்கு அறிவுடைமை யாகும்.