உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

பாவாணர் உரைகள்

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி தமிழைச் செவ்வையாய்க் காட்டுதற்குத் தகாத மொழியெனக்கொண்டது; கலைக் களஞ்சியம் அது மொழிபெயர்ப்பிற்கு முற்றாததெனக் கொண்டது. புதிய கல்லூரிக் கல்வித் திட்டம் அதை விருப்பப் பாடமாகக்கொண்டது.

சென்னைப் பல்கலைக் கழக அகராதியின் குறைபாடுகளை அச்சிட்டு ஆட்சிக் குழுவிற்கு (Syndicate) அனுப்பி அரையாண்டிற்கு மேலாகியும், இன்னும் மறுமொழியில்லை.

(3) இனிச் செய்யவேண்டுவன

ஒரு நாட்டு மக்கட்கு உரிமையாவணம் போன்றது, அந் நாட்டு வரலாறு. தமிழ் மொழி, நாகரிகம், நாடு ஆகியவற்றின் வரலாறு மறைக்கப் பட்டிருப்பதால், அவற்றின் உண்மையான வரலாற்றை முதற்கண் வரைந்து வெளியிடல் வேண்டும். அதன் பின், மொழிப்புரட்சி போன்ற ஒரு தமிழியக்கம் தோன்றல் வேண்டும். அதன் பயனாய், அயன்மொழிச் சொல்லாயிருக்கும் ஆட்பெயர் ஊர்ப்பெயர் அறிவிப்புச்சொல் முதலிய அனைத்தும், இயன்றவரை தனித்தமிழாக்கப் பெறல்வேண்டும். தமிழ் மீண்டும் தன் பழைய பெருமையை அடையவேண்டுமாயின், அது ஆட்சி மொழியும் கல்வி மொழியும் ஆவதினும், கோயில் வழிபாட்டு மொழி யாவதே முதன்மையாக வேண்டப்படுவதாம்.

வடமொழி தேவமொழியன்று. அதைத் தேவமொழி யென்று கொள்வது, பிராமணரையும் அவர் முன்னோரையும் தேவரென்றோ நிலத் தேவரென்றோ கொள்வதோடொக்கும். உலகில் தேவமொழியென ஒன்றில்லை. ஒன்றிருப்பின் அது தமிழே. சிவநெறியும் மால்நெறியும் தமிழர் மதங்களே. மந்திர வலிமையும் மன்றாட்டு வலிமையும் உள்ளத்தின் உரத்தைப் பொறுத்தனவே யன்றி ஒலியைப் பொறுத்தனவல்ல. வடமொழி வழிபாடே வலியுற்றதெனின், அதில் நடைபெறாத பிறநாட்டு வழிபா டெல்லாம் பயனற்றனவாதல் வேண்டும். அங்ஙனமாகாமை அறிக.

பிராமணர் அன்றும் இன்றும் சிறுபான்மையராதலால் அவர்களால் தனிப்பட ஒரு கேடுமில்லை. தமிழ் கெட்டதற்கும் தமிழர் தாழ்ந்ததற்கும் தமிழனே காரணம். ஆதலால் பிராமணரை வெறுத்துப் பயனில்லை. தமிழைப் போற்றிக் காத்த நக்கீரரும், பரிதிமாற்கலைஞரும், சாமிநாதை யரும் பிராமணரே. “ஆரிய நன்று தமிழ்தீதெனவுரைத்த" கொண்டானும் சேனாவரையனும் அவர்போல்வார் இன்றுள்ள பிறரும் தமிழரே. தன்மானமும் பகுத்தறிவும் நெஞ்சுரமும் உள்ளவனே நிறைமகன். இல்லாதவன் முழுமகன்.

தமிழ் நலமும் தமிழர் நலமுங் கருதாது, தன்னலமே கருதிக் கோடரிக்காம்புகளும் இருதலைமணியன்களும் சுவர்ப் பூனைகளு