உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

பாவாணர் உரைகள்

என்பதற்காக அதற்கு ஒரு பரிசுத் தொகை ஏற்படுத்தி அத்தகைய நூல்கள் சில எழுதச் செய்து அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் செய்திருப்பாரா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் வெளியிடும் 'செந்தமிழ்ச் செல்வி' என்னும் திங்கள் இதழில் நல்ல கருத்து வளமுடைய கட்டுரைகள் வெளிவருகின்றன. அதனை உலகிலேயே சிறந்த திங்களிதழ் என்று சொல்லலாம். மற்றும் மறைமலையடிகளார் பெயரால் நூலகம், பல்லாவரத்தில் ஒரு மன்றம் என்றெல்லாம் அமைத்துச் சிறந்த தமிழ்ப் பணியாற்றி வருகிறார்கள்.

திரு. சுப்பையா பிள்ளையவர்களை வெறும் சொற்களால் மட்டும் பாராட்டினால் போதாது. எல்லாரும் செந்தமிழ்ச் செல்வியை வாங்கிப் படிக்க வேண்டும். எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் வாங்கும்படி செய்ய வேண்டும்.

நடுவணரசு அவருக்கு ஏதாவதொரு சிறப்பு, அஃதாவது ஒரு வரிக் குறைப்பு, அல்லது சிறந்த அரசாங்க நிகழ்ச்சிகளுக்குத் தகுந்த அழைப்பு, வேறு ஒன்றும் வேண்டா-ஒரு மூன்று இலக்கம் அவர்கள் கையில் கொடுத்துவிட வேண்டும்.

சிலர் கூறுவார்கள்; அந்த ஆட்சி வரவேண்டும்-இந்த ஆட்சி வரவேண்டும் என்று. ஆனால், நம் சுப்பையா பிள்ளையவர்களுக்கு எந்த ஆட்சி இருந்தாலும் கவலையில்லை. அவருக்கு எந்த ஆட்சியிடத்தும் பகை கிடையாது. எந்த ஆட்சி வந்தாலும் அவர்களைத் தம் வயப்படுத்தி விடுவார்கள். துரை ஆட்சி, நீதிக்கட்சி ஆட்சி, காங்கிரசு ஆட்சி எல்லா ஆட்சியிலும் அவர் சிறந்த விழாக்களை அந்தந்த ஆட்சியினர் ஆதரவிலேயே நடத்தி இருக்கிறார். இஃது இறைவன் அவருக்குக் கொடுத்திருக்கும் நல்ல பண்பு. அவருக்கு யாரும் பகை இல்லை.

இந்தக் கூட்டத்தில் செல்வர்கள் இருந்தால் இவருடைய தொண்டுக்கு நன்கு உதவுங்கள். எப்படியாவது ஒரு மூன்று இலக்கத்தை அவர் கையில் ஒப்புவித்துவிட வேண்டும். நடுவணரசை வற்புறுத்த வேண்டும். சும்மா வாயினால் பாராட்டினால் மட்டும் போதாது. அவர் பணியை நன்கு பயன் படுத்திக் கொள்ள இறைவனை வேண்டி என் உரையினை முடித்துக் கொள்ளுகிறேன்.