1
குரலே சட்சம்
6
இயற்றமிழுணர்ச்சி போன்றே இசைத்தமிழுணர்ச்சியும் மிக்குவரும் இக்காலத்தில், இசைத்தமிழைப் பலரும் பலவாற்றால் தத்தமக் கிசைந்தவாறு ஆராய்வது தக்கதே, ஆனால், ஒரு படத்தைத் தலைகீழ்த் திருப்பிப் பார்ப்பதுபோல், முதனூலை, வழிநூலாகவும், வழிநூலை முதனூலாகவும் பிறழக்கொண்டு ஆராய்ச்சி நடாத்துவது ஒரு சிறிதும் தக்கதன்று. முத் தமிழில் எத்தமிழை ஆராயினும் முன்னதாக இன்றியமையாது அறிய வேண்டிய உண்மைகள் மூன்றுள. அவை தமிழும் தமிழரும் தோன்றியது குமரிநாடென்பதும், ஆரியர் வருமுன்னரே தமிழர் பல துறையிலும் முழுநாகரிக மடைந்திருந்தன ரென்பதும், தமிழர் அல்லது திரவிடரிடத்தி னின்றே ஆரியர் நாகரிகத்தையடைந்தன ரென்பதுமாம். ஆரியர் வருமுன்னரே தமிழ் முத்தமிழாய் வழங்கியதாதலின், ஒருவர் எத்துணைக் கலைபயில் தெளிவும் ஆராய்ச்சி வன்மையும் வாய்ந்தவ ரெனினும், ஆரிய வேதங்களை இசை முதனூலாகக் கொண்டு ஆராயின், விளக்கின்றிப் புத்திருள் வழி போவார் போல் இடர்ப்படுவாராவர். தமிழ்க் கலைகளையும் நூல்களையும் வடமொழியில் பெயர்க்கும்போது குறியீடு, பாகுபாடு, தொகையீடு முதலியவற்றை இயன்றவரை மாற்றி வழிநூலையே முதனூலாகக் காட்டுவது ஆரியர் வழக்கம்.
'தமிழ்ப்பொழில்' 17ஆம் துணர் 4ஆம் மலரிலிருந்து இசைத் தமிழைப்பற்றி விபுலானந்த அடிகள் எழுதிவந்த ஆராய்ச்சிப் பகுதிகளிற் சிலவற்றைப் படித்துப் பார்த்தேன். அவற்றால், அவ் வாராய்ச்சி முதலி லேயே கோணியதாக என் சிற்றறிவிற் கெட்டிற்று. உடனே இசைத்தமிழ்த் தோற்றத்தை யானே ஆராயத் தொடங்கினேன். அதன் பலனாகக் குரலே சட்சம் எனத் தோன்றுகின்றது. ஆயினும், இதை அறிஞர் ஆராய்ந்து உண்மை காணுமாறு இங்கு வரையலானேன்.
குரலே சட்சம் என்பதற்குச் சான்றுகள்
1. தன்மத நிறுத்தல்
(1) ஏழிசை வரிசையில் குரல் முதலிற் கூறப்படுதல்.
இதுகாறும், எத் தமிழ்நூலினும், குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்ற வரிசையிலேயே ஏழு சுரங்களும் கூறப்படு கின்றன.