104
மறுப்புரை மாண்பு
104
மறுப்புரை மாண்பு
என்றொரு பழநூற்பாவை எடுத்துக்காட்டினார். எனினும், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இதுபற்றிக் கருத்துவேறுபாடிருந்திருத்தல் வேண்டும். "முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
""
என்னும் பனம்பாரனார் பொதுப்பாயிரமும் இக் கருத்துக்கு இடந்தரும். இனி, தொல்காப்பியர் காலத்தில் நூல் என்றது பொதுவகைப்பட்ட பொத்தகத்தையன்று; ஏதேனும் ஒருவகை அறிவியலையே (Science). இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் தனித்தனி இலக்கியம், இலக்கணம் என இருதிறப்படும். அவற்றுள் இலக்கணமெல்லாம் அறிவியல் போன்றிருப்பதால் நூல் எனப்படும். மருத்துவம், கணிதம், கணியம் (வானநூல்) என்பனவும் அவை போன்ற பிறவும் அறிவியல்களே யாதலால், அவையும் நூலெனப்படும்.
“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்"
(செய். 78)
என்னும் தொல்காப்பிய நூற்பாவையும் அதன் உரையையும் நோக்குக.
இலக்கணம் ஒரு மொழிபற்றிய அறிவியலா யிருத்தலால் நூல் எனப்பட்டது. அதனைக் கூறும் பொத்தகமும் நூல் எனவேபடும். எ-டு: மதிவாணனார் நாடகத் தமிழ்நூல்.
ஆகவே, நூன்மரபு என்பது, தமிழிலக்கண நூல்களில் மரபாகக் கொள்ளப்பட்டுவரும் எழுத்துகளும் அவற்றின் பாகுபாடும் என்று பொருள் படுமே யன்றி, நூன்மரபு ஒன்றே தொல்காப்பியர் முதன்முதல் எழுதிய இலக்கணநூல் என்று பொருள்கொள்ள இடந்தராது.
எழுத்ததிகாரம் நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் எனத் தொண் (ஒன்பான்) பகுதிப்பட்டிருப்பதும், நூன்மரபு என்பது எழுத்ததிகாரம் முழுவதையும் குறிக்கவியலாதென்பதைத் தெற்றெனத் தெரிவிக்கும்.
தமிழ் நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்தி னின்று தோன்றியதென்றும், அதையே முதல் தொல்காப்பியர் நூலாக வடித்தார் என்றும், அதற்குப் பிற்பட்ட இலக்கணங்களெல்லாம் அவராலும் இரண்டாம் தொல்காப்பியராலும் பிந்திச் செய்யப்பட்டவையென்றும், இரு தவறான அடிப்படையிலேயே பர். தெ.பொ.மீ.யின் ஆராய்ச்சி இயங்கு வதால், முதற்கோணல் முற்றுங் கோணலா யிருப்பதை நெடுகலுங் காணலாம்.