உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

'பாணர் கைவழி’ மதிப்புரை(மறுப்பு)

திருவாளர் பி. சாம்பமூர்த்தி அவர்கள் பாணர் கைவழியைப் பற்றிய தம் மதிப்புரையைத் தொடங்கு முன்னரே, காலஞ்சென்ற மறைத்திரு விபுலாநந்த அடிகள் இயற்றிய யாழ்நூல் மதிக்கொணாக் களஞ்சிய மென்றும், அதுபற்றி இற்றை யுலகம் அவர்கட்கு மிகக் கடமைப் பட்டுள்ளதென்றும், அவர்கட்குப் புகழ்மாலை சூட்டுகின்றார்கள். இதற்குக் காரணம், அந் நூலின் போலி முடிபுகளெல்லாம் மதிப்புரையாளரின் விருப்பத்திற் கிசைந்திருத்தலே.

தமிழரென்று தம்மைச் சொல்லிக்கொண்டு ஆராய்ச்சியின் பேரால் தமிழுக்குப் பெருவசை விளைத்து ஆரிய ஏமாற்றத்திற்கு அரண் செய்தவருள் விபுலாந்த அடிகளும் ஒருவர் என்பது, இசையியல்புந் தமிழிசைத் தரமும் அறியாத பலர்க்குத் தெரியாதுபோயினும், அவற்றை யறிந்த ஒரு சிலர்க்கேனும் தெரியாததன்று. அவர்கள் உடல் தாங்கியிருந்த போதே ‘குரல் மத்திமம்' என்னும் அவர்கள் கொள்கையைக் கண்டித்துக் ‘குரல் சட்சமே' என்று செல்வியில் ஒரு கட்டுரை வரைந்தேன். அதற்கு அவர்கள் ஓர் இளைஞர் பெயரால் மறுப்பெழுதினார்கள். யான் அம் மறுப்பிற் காரு மறுப்பு வரைந்தேன். அத்தோடு நின்றது அவர்கள் தருக்கு. 'முதற்கோணல் முற்றுங்கோணல்’ ஆதலின் அடிப்படைக் கொள்கையே தவறாயிருக்கும்போது, அவர்கள் நூன்முடிபு எத்தகையதாயிருக்கும்? ஒரு மூலை முடங்கியில் கூட்டங்கூட்டி, எதிர்ப்பாளரைச் செலவிற்குப் பணங் கொடுத்து வரவழைக்காது, இசைத்தமிழ் மரபறியாதார் முன்னிலை யில் அவர்கள் தங்கள் யாழ்நூலை அரங்கேற்றியதாலும்; கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் அதனை வெளியிட்டதாலும்; அது புரையற்ற நூலாகப் போற்றப்பட்டுவிடாது. துவராடை யணிந்தவர் நூலெல்லாம் துகளற்றன என்னும் கொள்கை எம்மனோர்க் கில்லை.

இனி, மதிப்புரையாளரின் உடம்படாக் கூற்றுகளை யெல்லாம் ஒவ்வொன்றாகக் கூறி மறுப்பாம்.

கூற்றுகள் யாவும் இயன்றவரை சுருங்கிய அளவிற் கூறப்பெறும்.

16.7.1950-ல் வெளிவந்த இந்துச் செய்தித்தாளில் 'பாணர் கைவழி'யைப் பற்றித் திருவாளர் பி. சாம்பமூர்த்தி அவர்கள் வரைந்துள்ள மதிப்புரையைப் பற்றியது.