உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாணர் கைவழி' மதிப்புரை (மறுப்பு)

123


‘பாணர் கைவழி' மதிப்புரை (மறுப்பு)

மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீந்தேன் அணிபெற வொழுகி யன்ன அமிழ்துறழ் நரம்பின் நல்யாழ்"

என்னும் சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக.

123

(722)

7. “யாழும் வீணையும் இடைக்காலத்தில் இறுதிவரை தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாயிருந்து வந்தன. மாணிக்கவாசகரின் திருப்பள்ளி யெழுச்சி யில், இரு கருவிகளும் உடன் குறிக்கப்படுகின்றன. புதுக் கோட்டைத் திருமயத்திலுள்ள திருமால் கோவிலுள் எழுமுனிவர்(சப்தரிஷி) சிலையில் இரு கருவி வடிவங்களும் உடன் பொறிக்கப்பட்டுள. வேத இலக்கியத் துள்ளும் யாழும் வீணையும் பற்றிய குறிப்புள்ளது.'

நால்வகை யாழுள் செங்கோட்டியாழ் சிறந்ததாதலானும், குலப் பிரிவினையால் நேர்ந்த இழிவு காரணமாகப் பாணர் தம் பிழைப்பிழந்து பாண்தொழிலை அடியோடு கைவிட்டமையானும், ஏனை மூன்று யாழ்களும் படிப்படியாய் வழக்கிறந்தன.

ஆரியர் தென்னாடு வருமுன் அல்லது வடசொல் தமிழ்நாட்டில் வழக்கூன்றுமுன், செங்கோட்டியாழ் செந்தமிழ்ப் பெயராலேயே வழங்கி வந்தது. அதன்பின், அதற்கு வீணை என்னும் வடசொற் பெயர் புகுத்தப் பட்டது. சிறிது காலத்தின் பின் தமிழ்ப் பெயர் வழக்குவீழ்ந்தது. அதன் பின்னர், செங்கோட்டியாழ் வீணை என்னும் வடசொற் பெயராலும், இசை யெளியார் கையிலுள்ள பன்னரம்பு வில்யாழ் யாழ் என்னும் தமிழ்ப் பெயராலும், வழங்கிவந்தன. இடைக்காலத்தின் பின், அவ் வில்யாழும், கருவியும் பெயரும் ஒருங்கு வழக்குவீழ்ந்தது. பண்ணிசைத்தற்குரிய பண்டை யாழ்வகைகளுள், செங்கோட்டியாழ் ஒன்றே இன்று சிறிது உருக்கரந்தும் பெயர் மாறியும் வழங்கி வருகின்றது. தமிழ நாகரிகப் பழக்க வழக்கங்களுள்ளும் பொருள்களுள்ளும், தலைசிறந்தவற்றைத் தழுவிக் கொண்டு அவற்றைத் தமவாகக் காட்டுவது, ஆரியர் வழக்கம்.

செங்கோட்டியாழ் வீணையெனப் பிரிக்கப்பட்டபின் னெழுந்த நூல்களிற் சில, வில்யாழையும் செங்கோட்டியாழையும் முறையே "யாழும் வீணையும்” என உடன் கூறுகின்றன. திருமயம் சிலை இக் கொள்கை பற்றியதே. எந்நாட்டிலும் உயர்ந்த கருவியுடன் தாழ்ந்த கருவியும் பயில்வது இயல்பு. மதங்கம் (மிருதங்கம்) இருக்கும்போது கஞ்சிராவும், வீணையிருக்கும்போது புல்புல்தாராவும் வழங்குதல் காண்க. 'யாழ்', 'வீணை' என்னும் பெயர்கள் அடுத்துவரும்போது, அவற்றுள் ஒன்று மிடற்றிசை யைக் குறியாவிடின், முன்னது வில்யாழையும் பின்னது செங்கோட்டி யாழையுமே குறிக்கும்.

ஆரியர் கி.மு. 1500 ஆண்டுகட்கு முன்பே தமிழ்நாட்டிற் சிறுசிறு குடும்பங்களாகக் குடியேறிவிட்டதனால், வேத இலக்கியத்தில் யாழும் (வில்யாழும்) வீணையும் (செங்கோட்டியாழும்) பற்றிய குறிப்பிருப்பது வியப்பன்று.