50
மறுப்புரை மாண்பு
50
மறுப்புரை மாண்பு
பேரா.தெ.பொ.மீ.யண்டை மறைந்துவிடுகின்றது. அவருக்கடுத்துள்ள பர்.மு.வ.போன்றாரும் தமிழைக் கவனிப்பதில்லை. தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப் பேராசிரியர் தமிழைக் காத்திருப்பின், இந்தி தமிழ் நாட்டிற்குள் கால்வைத்தே யிருக்காது. பெரும்பாலும் எளியரான உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரிய ரெல்லாரும், இந்தியை எதிர்க்காதவாறு கல்வியமைச்சரால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். தமிழாசிரியர் தலையிடாததினால், இந்தியெதிர்ப்பு ஓர் அரசியற் கட்சி வேலையாகத் தோற்றமளிக்கின்றது. உரிமையுணர்ச்சியும் அறிவு விளக்கமும் கொழுந்து விட்டெரியும் இளம் காளையரான மாணவர், மேய்ப்பனில்லா ஆடுகள் போல் இடர்ப்பட்டுத் தவிக்கின்றனர். உள்ளத்தில் உணர்ச்சியுள்ள கல்லூரித் தமிழாசிரியர் ஒருசிலர், தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கஞ்சியும் தமிழ்த் தேர்வாண்மைப்பேறு நோக்கியும், வெளிப்படையாய் எதுவுஞ் செய்ய இயலாதிருக்கின்றனர். தமிழைக் காத்தல் தமிழாற் பெருஞ் சம்பளம் பெறும் தலைமைப் பேராசிரியர் தலைமேல் விழுந்த தலையாய கடமை. இதை அவர் எள்ளளவும் உணர்கின்றிலர். தமிழால் வேலையிழந்த என் போன்றார் அரும்பாடுபட்டு இந்தியை எதிர்க்க வேண்டியுள்ளது. "குத்துக்கு நிற்பான் வீரமுட்டி, கொள்ளை கொண்டுபோவான் தவசிப் பிள்ளை." தமிழைக் காக்குந் தகுதியின்றேல் தலைமைப் பதவி தாங்குதல் தவறாம். பொதுவாகப் பதவிபற்றியே மக்கள் புலமை மதிக்கப்படுவதால், தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் இந்தியை ஏற்கின் அல்லது எதிர்க்காவிடின், பிறர்க்கு மொழியுணர்ச்சி குன்றுவதொடு, அதுதான் சரிபோலு மென்று பிறழ்ந் துணரவும் இடமுண்டாகின்றது. பேராசிரியர் சிலர் செந்தமிழ்க் காவலரென்று சிறப்புப்பெயர் தாங்கிக்கொண்டு இந்தியை எதிர்க்காதிருப்பது, பெரிதும் வியப்பிற்கிடமானதே.
ம
பேரா.தெ.பொ.மீ.முதலாவது வழக்கறிஞராய் வரவேண்டிச் சட்டம் பயின்று பட்டம் பெற்றவர். பின்பு அத் துறையை விட்டுவிட்டுத் தமிழ்த் துறைக்குட் புகுந்தார். உண்மைத் தமிழ்ப் பற்றுள்ளவர் ஒரு கட்சியையும் சார்ந்திருக்க முடியாது. பேரா.தெ.பொ.மீ. பேராயக் கட்சியைச் சேர்ந்தவர். இந்தி தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்ட பின்பு, நாவலர் சோமசுந்தர பாரதியார், கலைத் தந்தையார் கருமுத்து தியாகராசர் முதலிய தூய தமிழர் பேராயக் கட்சியினின்று விலகிவிட்டனர். பேரா. தெ.பொ.மீ.யோ விலகவில்லை. அவர் கருத்திற்கு அக் கட்சிக் கொள்கை மிகப் பொருத்தமானது. மேலும், அவர் பதவி மேம்பாட்டுக்கும் அக் கட்சியாட்சி உதவி வருகின்றது ஆங்கிலராட்சிக் காலத்தும், மறைமலையடிகள் மறையும் வரையும் தமிழ்த்துறையில் இருக்குமிடம் தெரியாமலிருந்த அவர், இன்று தமிழ்நாட்டுத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்கின்றார். இதுவரை அவர் இந்தியை எதிர்த்ததேயில்லை.
இனி, அவரது கட்டுரையைத் தொடர் தொடராய் ஆராய்ந்து தடை விடை கூறுவோம்.