உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரிமைப்பேறு

3. விடுதலையுரிமை

131

தனிப்பட்ட அடிமை தன் தலைவனிடத்தினின்றும், பண்ணை யாள்கள் தம் ஆண்டையினின்றும், ஒரு குலத்தார் இன்னொரு குலத்தாரி னின்றும், ஒரு நாட்டார் இன்னொரு நாட்டாரினின்றும், விடுதலை பெறுவது விடுதலையுரிமையாம்.

ஆடவர்போற் கல்வி பெறுவதும் தேர்தல்களிற் குடவோலை யிடுவதும், அலுவலகங்களில் ஆடவருடன் வேலை செய்வதும், கணவன் இறந்தபின் கைம்மை (கைம்பெண்) வாழ்வு வாழ்வதும் மறுமணம் செய்து கொள்வதும், பெண்டிர் பெற வேண்டிய உரிமைகளாம்.

குலக் கட்டுப்பாடும் பெற்றோர் தடையும் மீறிச் சிறந்த முறையில் உலகம் போற்றுமாறு கூடி வாழ்வது, மணமக்கள் உரிமையாம்.

இனி, கட்சித் தலைவர்க்குரியது பேச்சுரிமை; எழுத்தாளருக்கும் நூலாசிரியருக்கும் உரியது எழுத்துரிமை; ஒருவன் தன் தாய்மொழியிற் பேச இடமிருப்பது மொழியுரிமை; ஒரு வகுப்பார் ஒருவகை உணவையுண்ணச் சட்டத் தடையில்லாதிருப்பது உணவுரிமை.

இனி, தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான உலக முதல் உயர்தனிச் செம்மொழியாதலால் அனைத்திந்திய ஆட்சி மொழியாகத் தமிழும் அமைவது தமிழரின் மொழியுரிமையாம்.

4. பொதுநலவுரிமை

தனி வாழ்க்கையில் ஒருவன் எவ்வளவும் ஈட்டலாம்; எங்குஞ் செல்ல லாம். ஆயின், கூட்டு வாழ்க்கையில், பொதுநலம்பற்றிப் பற்பல கட்டுப் பாடுகளும் வரம்பீடுகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவை தனிவாழ்க்கையில் உரிமைத் தடையேனும், கூட்டு வாழ்க்கையில் உரிமையேயாம்.

இரு பிள்ளைகட்குமேற் பெறக்கூடாதென்பது பிள்ளை வரம்பீடு; பதினைந்து செய்கட்குமேல் நிலம் வைத்திருக்கக் கூடாதென்பது, செல்வ வரம்பீட்டில் ஒருவகையான நிலவரம்பீடு. இவையெல்லாம், ஒரு மாநகரிற் பகல் வேளையில் போக்குவரத்து மிக்க இடத்தில், ஒருவன் ஒரு சாலையின் குறுக்கே செல்லக் கூடாதென்பது போன்றவையே.

5. மதவுரிமை

உலகிற் காணப்பட்ட பொருள்களைப் பற்றியும் கருத்து வேறு பாடிருக்குமாறு, மக்கள் மனப்பான்மை பல்திறப்பட்டுள்ளது. ஆகவே, காணப்படாத கடவுளைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் கருத்து வேறு பாட்டிற்கு எத்துணை யிடமுண்டென்பதைச் சொல்லவே வேண்டுவ தில்லை.