உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழின் தனியியல்புகள்

17

இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேரமுனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டிறுதியில் தாமியற்றிய சிலப்பதிகாரத்துள்,

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி”

(11:19-22)

என்று பாடியிருப்பதும்; அடியார்க்குநல்லார், "தொடியோள் பௌவமும்” என்னும் சிலப்பதிகார வேனிற்காதைத் தொடருக்கு,

“அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளியென்னு மாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின்காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றாரென்றுணர்க” என்று விளக்கவுரை வரைந்திருப்பதும்; தென்மாவாரியில் மூழ்கிப்போன பழம்பாண்டி நாட்டையும் அதன் பரப்பையு முணர்த்தும்.

பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும், இறந்துபட்ட முந்து நூல்களுள் அல்லது உரைகளுள் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும் அடியார்க்குநல்லார் அவற்றைக் கட்டிக் கூறியிருக்க முடியாது.

இறையனா ரகப்பொருளுரையிற் காணும் முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள, தென்மதுரைத் தலைக்கழகமும் கபாட (கதவ?) புர இடைக்கழகமும், முழுகிப்போன பழம்பாண்டி நாட்டுட்பட்டனவே.

ஒரு காலத்தில், தென்னிந்தியா, முழுகிப்போன தென்னில வாயிலாக ஆத்திரேலியாவுடனும், தென்னாப்பிரிக்காவுடனும் இணைக்கப்பட்டிருந்தத னாலும், தமிழ் உலக முதன்மொழியாதலாலும், தமிழ் உலக முதன்மொழி யாதலாலும், மாந்தன் பிறந்தகம் மடகாசுக்கர்ப் (Madagascar) பக்கம் என்று எக்கேல் (Haeckel) பேராசிரியரும், தங்கனியிக்காப் (Tanganyika) பக்கம் என்று இலீக்கி (Leakey) என்னும் மாந்தனூல் ஆராய்ச்சியாளரும், கூறியிருப்பவை, பழம் பாண்டிநாட்டை ஒரு பகுதியாகக் கொண்ட குமரிக் கண்டம் என்னும் ஒரு பெருந் தென்னிலப் பரப்பு, ஒருகாலத்திருந் தமைக்குப் புறச்சான்றுகளாம்.

தமிழரின் முன்னோர் தென்னாட்டுப் பழங்குடி மக்களாதலால், தமிழ் வரலாற்றிற்குக் குமரிநாட்டுக் கொள்கை இன்றியமையாத அடிப்படைச் செய்தியாகும்.