உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

செந்தமிழ்ச் சிறப்பு இந்தியாவின் வடமேற்கில் பிராகுவீ என்னும் திரவிட மொழியும் வடகிழக்கில் மாலெர் (மாலிற்றோ) என்னும் திரவிட மொழியும் இன்றும் பேசப்படுவதாலும், வட இந்திய ஆரியமொழிகளாகக் கருதப்படும் இந்தி, வங்கம் முதலியவற்றின் அடிப்படை திரவிடமா யிருப்பதாலும், நேபாள மொழியில் சில சொற்கள் இயற்சொல்லாய் வழங்குவதாலும், குச்சரம் (குசராத்தி), மராட்டி (மகாராட்டிரம்) ஆகிய விரண்டும் பழம் பஞ்ச திரவிடத்திற் சேர்க்கப் பெற்றிருந்தமையாலும், சென்னையிலிருந்து வங்கம் வரையும் கீழையிந்தியாவில் திரவிட மொழிகள் தொடர்ந்து பேசப் பெறுவதாலும், விந்தியத்தை யடுத்த நடுவிந்தியாவிலும் கோண்டி முதலிய திரவிட மொழிகள் வழங்குவதாலும், வேத காலத்தில் சோடர் என்னும் தெலுங்கச் சோழர் கங்கைக் கரையில் ஆண்டு வந்ததாகச் சொல்லப் படுவதாலும், வேங்கடத்திலிருந்து பனிமலை வரையும் (ஏறத்தாழ 2000 கல் தொலைவு) கொடுந்தமிழ் நாடா யிருந்ததாகவும் தெரிகின்றது.

முதன்முதல் தமிழராற் பிரித்துணரப் பெற்ற கொடுந்தமிழ் மொழி வடுகு அல்லது வடுகம் என்னும் தெலுங்கே. வடுகு என்பது வடகு என்பதன் உயிரிசைவு மாற்றத் (Harmonic Sequence of Vowels) திரிபு. வடக்கில் வழங்குவதால் வடகு எனப்பட்டது. வகரம் கன்னடத்தில் பகரமாகத் திரிதல் இயல்பாதலால், தெலுங்க நாட்டையடுத்து வாழ்ந்த ஒருசார் கன்னடியர் நீல மலையிற் குடியேறியபின் படகர் (வடகர்) எனப்பட்டனர். வடக்கினின்று வந்த கருநடர் வடகர்.

சொன்முதல் உயிர்மெய்யினின்று உயிரை நீக்கி ரகர மேற்றும் வடமொழி வழக்கிற்கேற்ப, தமிழ் அல்லது தமிழம் என்னும் சொல் வடநாட்டில் முதற்கண் 'த்ரமிள' என்று திரிந்து, பின்னர் முறையே த்ரமிட - த்ரவிட – த்ராவிட - த்ராவிடீ என வடிவு பெறலாயிற்று. ழகரம் பிறமொழிக் கின்மையால், வடநாட்டில் ளகரமாகத் திரிதல் இயல்பே.

கொடுந்தமிழ் மொழிகள் செந்தமிழினின்று வடநாட்டாரால் பிரித் துணரப்படுமுன், த்ரவிட என்னும் பெயர் தமிழுக்கினமான மொழிகளை யெல்லாம் தமிழுள்ளேயே அடக்கிற்று. கி.பி. 7ஆம் நூற்றாண்டினரான குமாரிலபட்டர், தெலுங்கைத் தமிழினின்று வேறுபடுத்தி, தமிழும் அதன் இன மொழிகளும் சேர்ந்த தொகுதியை ஆந்திர - திராவிடப் - பாசை (ஆந்த்ர த்ராவிட பாஷா) என்னும் இணைமொழிப் பெயராற் குறித்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குசராத்தி ஆகிய ஐம்மொழி நாடுகளும், வடவரால் முறையே திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்னும் பஞ்ச திராவிடம் என அழைக்கப்பெற்றன. மராட்டியும் குசராத்தியும் இன்று ஆரிய மொழிகளாய் மாறிவிட்டன. பஞ்ச திராவிடம் என்னும் பாகுபாடு அதாவது மராட்டியும் குசராத்தியும் திராவிட மொழிகளோடு சேர்க்கப் பெற்றமை. ஒரு காலத்தில் இவ் விரு மொழிகளும் திரவிட மொழிகளாய் இருந்தமையை உணர்த்தும் இது, தமிழ் திரவிட