உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11

இசைத் தமிழ்

இசைத்தமிழ்க் கிளர்ச்சி

66

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்னே ரிலாத தமிழ்.

""

என்று முன்னோர் புகழுமாறு, உலகிலேயே முதன்முதல் இலக்கிய முறை யாய்ப் பண்படுத்தப் பெற்றதும் இசை நாடகம் முதலிய பல அருங்கலை நூல்களெழுந்ததுமானது தமிழே. இது தற்போது புன்சிறு புதுமொழியினும் தாழ்வாகக் கருதப்படுகின்றது. இம் மாபெருங் கொடுமையைப் போக்கும் வண்ணம், வயவர்(சர்) செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் இசைத்தமிழ்க் கிளர்ச்சியைத் தோற்றுவித்தார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும் தமிழால் வாழ்க்கை நடாத்துவாரும் ஆகிய இரு சாராரும், அன்னாரை நெஞ்சார நினைத்து வாயார வழுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, இசைத்தமிழ்க் கிளர்ச்சி இசைக்கலைக்கே உலை வைப்பதென்றும், இசைக்கு மொழி வரையறை யில்லையென்றும், தமிழில் இசைப்பாட்டில்லை யென்றும், தமிழ் இசைக் கேற்காதென்றும் ஒரு சிறு கூட்டத்தார் வேண்டுமென்றே கட்டுப்பாடாய் உத்திக்கும் கலைக்கும் உண்மைக்கும் மாறாகப் பேசியும் எழுதியும் வருவது மிகமிக இரங்கத்தக்க தொன்றாம்.

இசைத்தமிழ்த் தொன்மை

ரியர் வருமுன்பே, கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னரே, குமரி நாட்டில் நீடித்து வழங்கிய தலைச்சங்கத் தமிழ் முத்தமிழாயிருந்தது தலைச்சங்கத் திறுதியில் செய்யப்பட்ட வழிநூலாகிய அகத்தியம் முத்தமிழிலக்கணம்.

தமிழ் தோன்றி வளர்ந்தது, பன்னூறாயிரம் ஆண்டுகள் நிலைபெற்ற தும் மனிதன் தோன்றியதும் நாலாயிரம் ஆண்டுகட்கு முன் தென்பெருங் கடலில் அமிழ்ந்துபோனதுமான குமரிநாடே (Lemuria) யாதலின் தமிழே முதல் இசைமொழி.