உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

செந்தமிழ்ச் சிறப்பு அமரோசை என்றும் பெயர். ச ப வொழிந்த மற்ற ஐஞ்சுரங்களும் அரைச் சுரம் முழுச்சுரம் எனத் தனித்தனி இரு நிலைய. அரைச் சுரத்திற்கு ஆகணம் என்றும் முழுச் சுரத்திற்கு அந்தரம் என்றும் பெயர். எழுசுரக் கோவைக்கு நிலை என்று பெயர். மக்கள் பாட இயலும் 3 நிலைகட்கும் முறையே மெலிவு, சமன், வலிவு என்பன பெயராகும். பண்கள், பண்(7 சுரம்), பண்ணியம்(6 சுரம்), திறம்(5 சுரம்), திறத்திறம்(4 சுரம்) என நாற்றிறத்தின. பெரும்பண்கள் மருதம், குறிஞ்சி, செவ்வழி, பாலை என நான்கு இவற்றுள், என நான்கு. இவற்றுள், ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நந்நான்கு வேறுபாடுடையது. பண்களைப் பிறப்பிக்கும் முறை, ஆயப்பாலை, வட்டப் பாலை, முக்கோணப்பாலை, நாற்கோணப்பாலை என நால்வகைத்து. பண்களின் பெயர்களெல்லாம், குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை எனத் தமிழ்ச்சொற்களாகவே யிருந்தன. பிங்கல நிகண்டில் 103 பண்கள் கூறப்பட்டுள. “நரப்படைவா னுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்குநல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை உணரலாம். தாளம் கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளையுடையது. தாளத்திற்குப் பாணி யென்றும் பெயர். "அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதல் 16 மாத்திரையுடைய பார்வதிலோசனம் ஈறாக 41 தாளம் புறக்கூத்திற்குரிய” என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார். இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள் தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வடமொழிப் பெயர்கள். இசைப்பாட்டுகள் தலைச்சங்க காலத்திலும்

இடைச்சங்க காலத்திலும் எண்ணிறந்திருந்தன. அவை யாவும் இறந்தொழிந்தன. கடைச்சங்க நூல்களில் ஒன்றான பரிபாடல் இசைத் தமிழிலக்கியமே. கருவிகள், தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, தாளக்கருவி (கஞ்சக்கருவி) என நான்கு. அவற்றுள், தோற்கருவிகள் பேரிகை படகம் இடக்கை உடுக்கை மத்தளம் சல்லிகை கரடிகை திமிலை குடமுழா தக்கை கணப்பறை தமருகம் தண்ணுமை தடாரி அந்தரி முழவு மதி(சந்திர) வளையம் மொந்தை முரசு கண்விடுதூம்பு நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம் தகுணிச்சம் விரலேறு பாகம் துணையுறுப்பு(உபாங்கம்) நாழிகைப் பறை துடி பெரும்பறை” முதலியவாகப் பல்வகைய. இவை, அகமுழவு அகப்புறமுழவு புறமுழவு புறப்புறமுழவு பண்ணமைமுழவு நாண்முழவு காலைமுழவு என எழுவகைப்படும்; மீண்டும், பாட்டுறுப்பு (கீதாங்கம்), கூத்துறுப்பு (நிருத்தாங்கம்), பொதுவுறுப்பு (உபயாங்கம்) என மூவகைப்படும். துளைக்கருவி புல்லாங்குழல் நாகசுரம் முதலியன. நரப்புக்கருவி பல்வகைத்து. அவற்றுள், பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு), செங்கோட்டியாழ் (7 நரம்பு) என்பன பெருவழக்கானவை. இவற்றுள் செங்கோட்டியாழே இதுபோதுள்ள வீணை.