உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

தமிழ் வரலாறு

கார்காலம், வடகோடு, கோவூர்கிழார், நாடுகிழவோன் எனச் செய்யுள் வழக்கிலும், கேடுகாலம், பேறுகாலம், விறகுதலையன், விறகு காடு, வடகரை, மழைகாலம் என உலக வழக்கிலும், வலிமிகாது வழங்கு வதாலும்; நான்கு, வெட்கு என்னும் திரிபு வடிவுகளுடன் நால்கு, வெள்கு என்னும் இயல்பு வடிவுகளும் வழங்கி வருவதாலும்; பல்கு, பல்பொருள், சில்கால், வல்சி, வள்பு எனச் சில சொற்கள் என்றும் இயல்பாகவே யிருப்பதனாலும்; முதற்காலத்தில் தோன்றல் திரிதற் புணர்ச்சி அத்துணைக் கண்டிப்பா யிருந்ததில்லை யென ா உய்த்துணரலாம்.

மூவகைப் புணர்ச்சியும் ஒலியிசைவை மட்டுமன்றி, இரு பொருட் கிடைப்பட்ட நெருங்கிய தொடர்பையும் உணர்த்துதல்

காண்க.

(15) ஓரியலமைப்பு (Uniformity of Words)

ஒருதுறைப்பட்ட சொற்களையெல்லாம், முதலோ ஈறோ

எதுகையோபற்றி ஒத்தவடிவாக்குவது ஓரியலமைப்பாம்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, தொண்டு (ஒன்பது), பத்து, நூறு என்னும் முதற்காலத்து எண்ணுப் பெயர்களெல்லாம் உகரத்தில் இறுதல் காண்க.

தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்னும் திசைப் பெயர்களும் அங்ஙனமே.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை என்னும் பெண்பாற் பருவப் பெயர்கள் ஐகாரத்தில் இறுகின்றன. அதோ, அந்த, அவன், அவள், அவர், அது, அவை, அம்பர், அங்கு, அவண், அதோள்-அதோளி.

இதோ,இந்த,இவன், இவள், இவர், இது, இவை, இம்பர், இங்கு, இவண், இதோள்-இதோளி.

உதோ, உந்த, உவன், உவள், உவர், உது, உவை, உம்பர், உங்கு, உவண், உதோள்-உதோளி.

எதோ, எந்த, எவன், எவள், எவர், எது, எவை, எம்பர், எங்கு, எவண், எதோள்-எதோளி.

இத்தகைய ஓரியலொழுங்குபட்ட சுட்டு வினாச் சொற்கள் வேறெம் மொழியிலும் இல்லை. அதா, அந்தா, அன்னா, அன்ன முதலிய சொற்கட்கும் இங்ஙனமே ஒட்டிக்கொள்க.