உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பாவாணர் நோக்கில் பெருமக்கள் வாழ்க்கை வரலாறுகள் முதலியன பற்பலவும், பெரும் புலவர்க்கும் பயன் படும் அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அவரால் வெளியிடப்பட்டுள்ளன. உரைநடைப் பொத்தகங்களெல்லாம் அவராலேயே எழுதப்பெற்றவை.

சுந்தரம் பிள்ளை பல நூல்களை இயற்றாவிடினும் அல்லது வெளியிடாவிடினும், மனோன்மணீயத் தமிழ்த்தாய் வாழ்த்தினால், தமிழனை மூவாயிர வாட்டை யாரிய அடிமைத்தன அகக்கரண வுறக்கத்தி னின்று தட்டியெழுப்பிய பெருமைக்குரியவராவர்.

இந் நூற்றாண்டில் மட்டுமன்றி, இக் கிறித்தவ வூழியிலேயே திருவள்ளுவர்க் கடுத்தபடியாக வைத்தெண்ணப்படத்தக்க தனித்தமிழ்த் தந்தையார் மறைமலையடிகளே. தமிழ் ஆங்கிலம் வடமொழி ஆகிய மும்மொழியுஞ் செம்மையாய்க் கற்று, வரலாறு, நல்வாழ்வியல், சமயம், குலவியல், உணவியல், சீர்திருத்தம், மாந்தன் வசியம், அறிதுயில், தொலைவிலுணர்தல், மறுமைநிலை முதலிய பல்வேறு அறிவியல் துறைகள் பற்றி, முதனூல், உரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி, திறனாய்வு, அங்கதம், மறுப்பு முதலிய பன்முறைகளில்; உரைநடை, செய்யுள் என்னும் இருவகை மொழிநடையிலும், பனுவல், நூல், நாடகம், புதினம், கட்டுரை, கடிதம் முதலிய பல்வகை வடிவிலும், ஐம்பதிற்கு மேற்பட்ட அரும்புலத் தனித் தமிழ்ப் பொத்தகங்களைத் தாமே எழுதி அடுக்கி அச்சிட்டு வெளியிட்டு, தமிழை வடமொழிப் பிணிப்பினின்றும், தமிழனை ஆரிய அடிமைத் தனத்தினின்றும் மீட்டுப் பல்வகை வாகை சூடிய, தனிப் பெரும்புலவர் மறைமலையடிகள். அவர்போலும் மற்றொருவர் அடுத்த நூற்றாண்டிலும் தோன்றுதலரிது.

மறைமலையடிகளுடன் தனித்தமிழ் மறைந்ததென்று பறையறைவர் வையாபுரிகள். மறைமலையடிகளின் அடியொற்றித் தனித்தமிழை வளர்க்கவும் பரப்பவும், 'உலகத் தமிழ்க் கழகம்' என்னும் பொதுமக்கள் இயக்கம் ஒன்று தமிழரிடைத் தோன்றி வளர்ந்து வருகின்றது. அதன் முதற்காலச் செயலாளராக விருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி யென்னும் தனித்தமிழ் மாதிகை நடாத்தியும், ஐயை, மக புகுவஞ்சி, நூறாசிரியம், உலகியல் நூறு முதலிய தனித்தமிழ்ப் பனுவல்களை வெளியிட்டும் வருகின்றார். பால் என்பது தனிப்பாலே. தமிழ் என்பது தனித்தமிழே. “என்றுமுள தென்றமிழ்” என்ற கம்பர் கூற்றுப்படி, தமிழ் மாந்தனுள்ள காலமெல்லாம் மறையாது நின்று, எல்லையறு பரம்பொருள் போல் முன் குமரிநாட்டிலிருந்தபடியே இனியும் என்றும் தனித்தமிழாகவே யிருக்குமென்று எதிர்காலத் தமிழரால் வையாபுரிகள் குறும்பியளவாக் குடைந்து தோண்டிச் செவியுறுத்தப்படுவர் என்பது திண்ணம்.