உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

13

மேற்கொண்டார். தி.பி.க்கு தமிழ் எண்ணில் நாளும் ஆண்டும் அமையும். திங்கள் முழுப் பெயராக இருக்கும்.

(எ-டு) 2004 துலை 24. (9-11-73)

பாவாணர் பெரும்பாலும் அட்டைகளையே பயன் படுத்துவார். உள்நாட்டுறையோ, உறையோ பயன்படுத்துதல் அருமையாம், அட்டை, உறை ஆகிய எவையாயினும், அவரே தமக்கென முகவரி அச்சிட்டு வைத்துக்கொண்டு பயன் படுத்தியது இல்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழக வாசகராக இருந்த காலத்தில் மட்டும் பல்கலைக்கழகம் அச்சிட்டுத் தந்த கடிதங்கள் சிலவற்றைப் பயன்படுத்தியுள்ளார். ஆதலால், ஒவ்வொரு கடிதத்திலும் தம்கைப்படவே இடம் நாள் முகவரி குறித்துள்ளார்.

(எ-டு) பி (ஆ) 969, 5ஆம் மேற்குக் குறுக்குச் சாலை, காட்டுப்பாடி விரிவு. வ.ஆ. மாவட்டம் 15, கும்பம், 1995.

ஐயா, அன்பார்ந்த ஐயா, அன்பார்ந்த ஐயன்மீர், அன்பரீர், பேரன்பரீர், அருந்தமிழ் அன்பீர், அருந்தமிழ்ப் புலவீர் இன்ன விளிப்புகளைப் பாவாணர் ஆண்டுள்ளார்.

‘வணக்கம்’; 'நலம்; நலமாக'; 'தங்கள் கடிதம் கைவயம்’ என்பனவும் விளிப்பினை அடுத்து இடம்பெறுவன. பின்னே செய்திகள் தொடரும். ஓரட்டையில் எழுதும் செய்தி. அதற்குச் செலவிட்ட தொகையில் எள்ளளவும் வீணாயதாகக் கருத வொண்ணா வகையில் அல்லது ஓர் உறையில் பல பக்கங்களில் எழுதும் செய்தியை ஓரட்டையில் எழுதிவிட்ட நிறைவகையில் அமைந்திருக்கும். மழுங்கிய பார்வையர்க்குப் பெருக்காடித் துணைகொண்டுதான் பார்க்க வேண்டிய நுணுக்கத்தையுடைய தாகக் கடிதம் அமைந்திருக்கும்.

பேரா திரு. கு. பூங்காவனர்க்கு 1-11-78இல் பாவாணர் வரைந்த கடிதத்தில் “முந்தி விடுத்த அஞ்சலுறையை நெடுஞ் செய்திக்கு வைத்திருக்கின்றேன்” என்றுள்ள குறிப்பு. பூங்காவனர் விடுத்த உறையையே, ‘அச்செய்திக்கு அவ்வுறை வேண்டுவ தில்லை' என்னும் எண்ணத்தால் அதனைச் சேமத்தில் வைத்து விட்டுச், செய்திக்கு ஏற்ற அளவில் ஓர் அட்டையை எடுத்துப் பாவாணர் பயன்படுத்துகின்றார் என்பது புலப்படுத்துகின்றது. இக்குறிப்பு சிக்கனத்தை மட்டுமன்றிப், பயனீட்டையும் விளக்கு வதாம்.