114
தமிழ் மரபுரை
தமிழ வேந்தரைச் சத்திரியர் என்று கூறி, வேதவேள்வி இயற்றுவித்ததும், வர்மன் என்னும் பெயரீறு கொள்ளவைத்ததும் ஓர் ஆரிய ஏமாற்றே. தமிழ வணிகரை வைசியர் என்று கூறிப் பூணூல் அணிவித்ததும், குப்தன் என்னும் பெயரீறு கொள்ளவைத்ததும், இத்தகையதே.
ஆத்திரேலியப் போலியர், நீகரோப் போலியர், நண்ணிலக் கடற்கரையர், காண்டினேவியர் முதலிய அறுவகையினம் சேர்ந்த கலவையினத்தார் தமிழரென்று, ஒரு தென்னிந்திய வரலாற்று நூல் கூறுகின்றது.
(4) தமிழ்நாகரிக மறைப்பு
தொன்னூல்களான தென்னூல்களெல்லாம் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டபின், அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின. அதனால், இந்திய நாகரிகம் பெரும்பாலும் ஆரியரதென்றும், அதன் ஒரு சிறுகூறே தமிழரது அல்லது திரவிடரது என்றும் சொல்லப் படுகின்றது.
(5) தமிழ்க்கலை மறைப்பு
இந்தியாவில் முதன்முதல் தோன்றியது சாமவேத இசைக் கோவை என்பதும், தமிழிசையைக் கருநாடக சங்கீதம் என்றும் தமிழ் நடனத்தைப் பரதநாட்டியம் என்றும் கூறுவதும், கலை மறைப்பாம். (6) தமிழ் முதனூல் மறைப்பு
அகத்தியத்தைத் தமிழ் முதனூல் என்பதும், பிராதி சாக்கியங் களிலும் பாணினீயத்திலும் தமிழிலக்கண முன்னூல்கள் குறிக்கப் பெறாமையும், தமிழ் முதனூல் மறைப்பாம்.
முப்பால் என்பது திரிவர்க்கம் என்பதன் மொழிபெயர்ப் பென்றும், அறம்பொருளின்பம் வீடென்பது தர்மார்த்த காம மோட்சம் என்பதன் மொழிபெயர்ப்பென்றும், திருக்குறளின் அறத்துப்பால் தரும சாத்திரத்தையும் பொருட்பால் அருத்த சாத்திரத்தையும் காமத்துப்பால் காம சூத்திரத்தையும் தழுவினவை யென்றும், கூறுவதும் முதனூல் மறைப்பே.
நூல்
இனி, பெரியபுராணம் உபமன்யு பக்தவிலாஸத்தையும், திரு விளையாடற்புராணம் ஆலாஸ்ய மான்மியத்தையும், சிவஞான போதம் என்னும் மெய்கண்டான் ரௌரவாகமத்தின் ஈற்றிலுள்ள மொழி பெயர்ப்பையும், முதனூலாகக் கொண்டவை யென்று கூறுவது, நெஞ்சழுத்தமும் துணிச்சலும் மிக்க முதனூல் மறைப்பென வறிக.