பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 இன்ப இரவு கடைசி நிகழ்ச்சியாகப் புரட்சிக்கவி நாடகம் நடைபெறும். காப்பியமாக இருந்த புரட்சிக்கவியை அழகிய மேடை நாடகமாக மாற்றி எழுதினார் பாவேந்தர். ஞானமணி புரட்சிக்கவி உதாரனாக நடித்தார். செல்வி சரசுவதி என்ற பெண் அமுதவல்லியாக நடித்தாள். அப்பெண்ணுக்கு அப்போது 17 வயதிருக்கும். இளமை, அழகு, இசை, நடிப்பு ஆகிய எல்லாம் ஒருங்கே அப்பெண்ணிடம் அமைந்திருந்ததாகப் பாவேந்தரே அடிக்கடி பாராட்டிப் பேசுவார். முதலில் உதாரனாக நடிக்க மறுத்த ஞானமணி கூட. அப்பெண்ணின் அழகைக் கண்டு மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டார். இன்ப இரவுக்கான விளம்பரத் தட்டிகள், திரைச்சீலைகள் யாவும் சென்னையைச் சேர்ந்த சிறந்த ஓவியர்களைக் கொண்டு எழுதப்பட்டன. இன்ப இரவு நாடகத்தை முதன் முதலில் சென்னை நகரிலேயே அரங்கேற்ற முயற்சி செய்தோம். அங்கு தியேட்டர்’ கிடைக்காத காரணத்தால் சேலம் சென்ட்ரல் தியேட்டரில் இன்ப இரவை அரங்கேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 31.1.44ஆம் நாள் நடிக-நடிகையர்கள் எல்லாரும் சேலம் வந்து சேர்ந்தார்கள். 5.2.44ஆம் நாள் சேலம் நீதிக்கட்சிப் பிரமுகரும், சுவர்ணாம்பிகா உந்து வண்டி உரிமையாளருமான இராவ்சாகிப் பி. இரத்தினசாமி அவர்கள் தலைமையில் இன்ப இரவு நாடகம் முதன் முதலாக அரங்கேறியது. அதன் பின்னர் சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர், தோரமங்கலம் புலவரேறு அ. வரத நஞ்சைய பிள்ளை, இராவ் சாகிப் குமாரசாமி பிள்ளை ஆகியவர்கள் தலைமையில் தொடர்ந்து நடைபெற்றது. கடைசியாக 9.2.44ஆம் நாள் பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் 31.1.44லிருந்து 10.2.44வரை சேலத்தில் தங்கியிருந்தார். பிறகு இன்ப இரவு நாடகக்குழு சேலத்திலிருந்து நாமக்கல்லுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒருநாள் தான் நடைபெற்றது. நாடகத்துக்கு நல்ல வசூல் என்றாலும் எனக்கு அதைத் தொடர்ந்து நடத்த விருப்பமில்லை. காரணம் ஒரு நாடகக் குழுவைக் கட்டிக் காப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு முதலில் தெரியாமல் போய்விட்டது. நடிகர்கள் நடிகைகள், இசைக் குழுவினர், நாட்டியக்காரர், ஒப்பனைக்காரர் உட்பட ஏறக்குறைய இருபத்தைந்து பேர்களுக்குமேல் இருந்தார்கள். அவர்களை யெல்லாம் இழுத்துக் கொண்டு தமிழகமெல்லாம் சுற்றித் திரிவது எனக்குப் பெரும் மலைப்பாக இருந்தது. எனது அனுபவக் குறைவே இதற்குக் காரணம் என்பதை அறிந்தேன். பலமுறை சிந்தித்துப்