பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 285 பாடுவார். சாம்பசிவம் அப்பாடலுக்கு விளக்கம் கூறுவார். இதனால் பாவேந்தர் பாடல்களில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. சிறையிலிருந்து வெளிவந்ததும் முதல் வேலையாகப் பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியொன்றை வாங்கிக்கொண்டு நேராகப் புதுச்சேரி புறப்பட்டேன். புதுவையில் கால்வைத்ததும் புரட்சிக்கவிஞர் வீடு எதுவென்று கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை. நீண்ட நேரம் சுற்றியலைந்த பிறகு எதிரில் வந்த ஒருவரை அணுகி விளக்கமாகக் கூறிக் கேட்டபோது, ஒ! வாத்தியார் வீடா? என்று சொல்லிப் பெருமாள் கோவில் தெருவைக் காட்டினார். தாடி, மீசை, கதர்ச் சட்டை, கதர்ப்பை ஆகிய சிறைக்கோலத்தோடு பாவேந்தர் எதிரில் போய் நின்றேன். அப்போது ஏ.கே. செட்டியார், முல்லை முத்தையா ஆகியோர் பாவேந்தருடன் பேசிக் கொண்டிருந்தனர். நான் நின்று கொண்டிருந்தேன். தமது பேச்சைக் சாவகாசமாக முடித்துவிட்டு என் பக்கம் திரும்பி 'யார் நீ? என்ன வேணும்? என்று கேட்டார். நான் நேராகச் சிறையிலிருந்து வருவதாகச் சொன்னதும் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. என்னைப் பற்றி எல்லாச் செய்திகளையும் பொறுமையாகக் கேட்டார். ஒரு வாரம் அவரோடு புதுச்சேரியிலேயே தங்கியிருந்தேன். இடையிடையே சுத்தானந்த பாரதியார், பொதுவுடைமைக் கட்சிப் பிரமுகர் சுப்பையா ஆகியோரையும் பார்த்துவிட்டு வருவேன். புதுவையிலிருந்து புறப்படும்போது பாவேந்தருக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டிருந்தது. அலிப்பூர் சிறையில் பொதுவுடைமைவாதிகளின் கூட்டமொன்று இருந்தது. பாண்டி சுப்பையா, நாகப்பட்டினம் முருகேசன், கோவை ரமணி, கேரளா இம்பிச்சி பாபா ஆகியோர் அக்கூட்டத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் சிறைக்குள்ளேயே அரசியல் வகுப்புகள் நடத்துவது வழக்கம். நான் சிறைக்குள் இருக்கும்போதே அவர்களின் தொடர்பால் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினன் ஆனேன். அப்போது பொதுவுடைமைக் கட்சியும், சமதருமக் கட்சியும் காங்கிரசுக்குள்ளேயே அதன் அங்கங்களாக இயங்கிக் கொண்டிருந்தன. நான் புதுவையிலிருந்து ராஜபாளையம் திரும்பினேன். ராஜ பாளையத்தில் காங்கிரஸ் கூட்டம் நடந்தால், என் நண்பர் வசந்தன் நீங்களே சொல்லுங்கள் (சித்திரச் சோலைகளே என்று தொடங்கும் பாடல்) உலகப்பன் பாட்டு ஆகிய பாவேந்தர் பாடல்கள் இரண்டையும் முதலில் பாடுவார். அதன் பிறகு கூட்டம் துவங்கும்.