சாம்பல்
11
பட்டால், எதுதான் பிடி சாம்பலாகாது? வாதாபி மட்டும் விதி விலக்கோ! உமது புலிகேசி மட்டும் தப்புவானோ! சிங்கங்கள் பலச் சீறிப் போரிட்டுச் செந்தமிழ் நாட்டவரிடம் பங்கப்பட்டதை இவன் அறியான் போலும்! ஏடா! மூடா! புலிகேசி தமிழகத்தைத் தாளின்கீழ் போட்டுத் துவைக்கலாம் என்று எண்ணினான்; அவனுடைய சேனை தோற்றோடும் போக்கில், அவனுடைய பிணத்தைத் துவைக்கும் என்பதைக் கண்டானா அவன். வேங்கிநாட்டிலே அவன் பெற்ற வெற்றி, வெறியூட்டிவிட்டது. வடநாட்டு வேந்தன் ஹர்ஷனை வென்றுவிட்டதாலேயே, தன்னை மிஞ்சிடும் தார்வேந்தன் எவனும் இல்லை என்று இறுமாந்து கிடந்தான்; இறந்து பட்டான்! அவனுடைய நகரம் எரிந்துபட்டது. தமிழரிடம் கலந்துறைவோர், அவரிடம் திங்களின் குளிர்ச்சியைக் காண்பர்; எதிர்த்தோர், கதிரவனின் வெம்மையால் கருகுவர்.” என்றனர் தமிழ்வீரர். சோகத்தோடு சாளுக்கியன், “ஆம்! வீரர்களே! வெற்றியால் களித்துள்ளவரே! கருகித்தான் போயிற்று, எமது வாதாபி!” என்று கூறினான்.
“சாளுக்கிய நாடு...?” என்று கேலி செய்தனர் தமிழ் வீரர்.
“இனி, தலைதூக்காது.”—என்று தலையைக் கவிழ்த்துக் கொண்டு பேசினான் சாளுக்கியன். அழிந்துபட்ட நகரை விட, அவன் அதிக பரிதாபமாகக் காணப்பட்டான்.
வெற்றி பெற்ற பல்லவப் படை, வேழம் முதற்கொண்டு வேழமுகச் சிலை வரையிலே, ஒன்றுவிடாமல், சாளுக்கிய நாட்டுப் பொருள்களைப் பல்லவ நாட்டுக்குக் கொண்டுசென்றனர். அந்தச் சாளுக்கியனும், பல்லவ நாட்டுக்கு இழுத்து வரப்பட்டான்-போரிலே பிடிபட்டவனல்லவா! அவனுடைய கண்கள், சாளுக்கியத்தின் அழிவைக் கண்டு கலங்கிற்று—ஆனால் பல்லவநாட்டிலே ஒவ்வொருவர் முகத்திலும் வெற்றி ஒளி வீசக்கண்டு, பல்லவத்தின் எழிலைக் கண்டு; அவனுடைய கண்கள் அடைந்த வேதனை, களத்திலே எழுந்ததைவிட அதிகமென்றே கூறலாம்.