சாம்பல்
41
அன்றோர் நாள் பவனி வந்தேன்... “பல்லவ சாம்ராஜ்யாதிபதி, நரசிம்ம மகாராஜாதிராஜர் வாழ்க!” என்று பெருந்திரளான மக்கள் அன்புடன் ஆரவாரம் செய்தனர். அதே மக்கள், அடுத்த விநாடி அவரைக் கண்டதும் “புலிகேசியை வீழ்த்திய ஈடில்லாத் தலைவர், எமது பரஞ்ஜோதியார் வாழ்க!” என்று ஆரவாரம் செய்தனர்.
என்ன இருந்தாலும், எனக்கு உரைத்த வாழ்த்தொலியை, பரஞ்ஜோதியாருக்கு அளித்த வாழ்த்தொலி வென்று விட்டது!
நான், பல்லவ சாம்ராஜ்யாதிபதி! அவ்வளவு தான் சொன்னார்கள் மக்கள்.
அவரை? எமது பரஞ்ஜோதி என்றல்லவா அழைத்தனர்.
எனக்கு இலேசாகக் கோபம்! பொறாமை, கொஞ்சம் உண்டாயிற்று—மறைப்பானேன். கொஞ்சம் அச்சம்கூடத்தான். அருவருப்பும் தட்டிற்று, அடிக்கடி மக்கள் வெற்றி வீரன், வாதாபியை வென்ற தீரன் என்றெல்லாம் அவரைப் புகழக் கேட்டு.
மன்னனும் மனிதன்தானே! மனம் நிம்மதியாகவா இருக்க முடியும் மன்னன், மக்களின் மனம், படைத் தலைவனிடம் அடைக்கலம் புகுவது கண்டு?
பரஞ்ஜோதியாரிடம் எனக்கும் மதிப்புத்தான். இல்லை என்று யாரும் கூற முடியாது. ஆனால், அவர் அருகே இருக்கும்வரை, நான் அரசனாக இருக்க முடியாது. நரசிம்மன் அரசனாக வேண்டும்! பரஞ்சோதியில்லாமல், பல வெற்றி பெற்றாக வேண்டும். பல்லவ மன்னனிடம் ஒரு படைத்தலைவன் இருந்தான், பரஞ்ஜோதி அவன் பெயர், என்று வரலாறு இருக்க வேண்டுமேயொழிய, பரஞ்ஜோதியை படைத்தலைவராகக் கொண்ட பல்லவ மன்னன் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் நரசிம்மன் என்று வரலாறு இருத்தலாகாது.
ஆகவேதான் அவரை நீக்கிவிட்டேன்.