சாம்பல்
45
அவனுடைய நாட்டில், அவன் அறியா வண்ணம், ஒரு பிடி சாம்பலால் வென்றுவிட்டேன்!
அந்த வெற்றியின் தன்மை எத்தகையது? ஆஹா! எண்ணும்போதே என் உள்ளம் பூரிக்கிறது. பரஞ்ஜோதி! தமிழகம் அந்த ‘ஜோதி’யைக் காண முடியாதபடிச் செய்துவிட்டேன்.
‘பரஞ்ஜோதி’ இனி இல்லை அல்லவா! அடியார் இருப்பார்! நாயன்மாராக இருப்பார்! ஆனால் தமிழகத்தின் தலை சிறந்த படைத்தலைவன் இனி இல்லை! வாதாபிகளைத் தாக்கவரும் வீரர்கள் இல்லை—தோத்தரிக்கும் திருவாயும் கூப்பிய கரமும் இருக்கும். இருக்கட்டும்—கோயில் கட்டுபவர் கட்டட்டும்—பதிகம் பாடுவர்,—சலிக்காது பாடட்டும்—ஆனால் ஒரு மாவீரனை இழப்பர்; படைத்தலைவன் இனி இரான்.
வெற்றி மாலை பூண்ட மார்பிலே இனி வெண்ணிறச் சாம்பற்பொடி! விடு கணையை! வீசு வாளை! செலுத்து தேரை! குதிரைப் படை முன்னால் பாயட்டும் வேற்படையாளர்கள் விரைந்து வருக! என்றெல்லாம் முழக்கமிட்ட வாயிலிருந்து இனி, ‘பொன்னார் மேனியன்’—‘பிறவாவரம் தாரும்’ ‘அடியார்க்கும் அடியேன்’ என்றெல்லாம் பஜனைப் பதங்கள்தான் வரும். வாதாபியை வென்றவனை நான்வென்றேன்! புலிகேசியைக் கொன்றவன் மீது வஞ்சம் தீர்த்துக் கொண்டேன். மாற்றார்கள் என்றால் சீற்றம் கொண்டெழுவோனை, சிவனடியாராக்கிவிட்டேன். ஒருபிடி சாம்பலால்! ஒப்பற்ற சாளுக்கிய சேனையால் சாதிக்க முடியாத காரியத்தைச் சாதித்துவிட்டேன். அஞ்சா நெஞ்சனை அடியவனாக்கி விட்டேன்.
வாளேந்திய கரம், இனி வழியே வருகிற பண்டாரங்களின் தாள் ஏந்திடும். தோள் பலத்தால் தொலைதூரம் வரை தன் நாட்டின் கீர்த்தியை நிலைநாட்டினான். இனி நாடு, வீரம், போர், வெற்றி இவை பற்றிய சிந்தனையே இராது. சிங்கத்தைச் சிறு முயலாக்கிவிட்டேன்! வீரப் பட்டயம் கட்டிய நெற்றியில் விபூதிப் பட்டை!