உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளியூரில்‌

59

கொள்கிறார்கள்; வேறு சிலர் சிரிக்கவே செய்கிறார்கள். சிவலீலை, விஷ்ணு மகாத்மீயம், கருட புராணம், அனுமத் பிரபாவம் ஆகியவை பற்றிக் கூறும்போது, முன்பெல்லாம், வெற்றிக் கொடி பிடித்து வீரர் முன்செல்ல, வெண்சாமரம் வீசிடும் வேல்விழியார் உடன் வர, கோலாகலமாகப் பவனி வரும் ‘ராஜாதி ராஜன்’ போல, ‘சபை’ செல்லுவார். பசுவத்நாம சங்கீர்த்தனம் சொல்லுவார்; மக்கள் இலயித்துக்கிடப்பார்கள்.

தொட்டார் வில்லினை
தொடுத்தார் அம்பு
விட்டார் எதிரே
அறுந்தது நாண்
ஓடிந்தது வில்

மலர்ந்தது இதயம்

என்று அவர் சீதாகலியாணத்தின் சிறப்பினைச் செப்பியபோது. மக்கள் எவ்வளவு ஆனந்தப் பரவசமடைவார்கள்! ஆடவரெல்லாம் ஸ்ரீராமராவர், ஆரணங்குகளெல்லாம் சீதா தேவியாவர்! கோபால கிருஷ்ணனுடைய ரச லீலாக்களைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்தனர்! பத்தினிகள் பட்ட துயர் கேட்டு, விழி சிவந்திடும் அளவுக்குக் கதறுவர்! அப்படியிருந்து வந்த மக்களைக் கபிலவஸ்துவிலிருந்து கிளம்பிய புதுப்புயல், புத்த மார்க்கம், சிந்திக்க வைத்து விட்டது. கதைகளிலே ‘ரசம்’ இருக்கிறது எனினும், பயன் உண்டோ அவைகளைக் கேட்பதால்! அறிவுக்குத்தான் பொருந்தி வருகிறதோ! நடைமுறைக்கு ஏற்றது என்று சொல்லத்தக்கதாகவாவது இருக்கிறதா? பல விஷயங்கள் வெளியே சொல்வதற்கே வெட்கப்பட வேண்டிய வகையிலல்லவா உள்ளன என்று பேசிய மக்களைவிட, சிந்தித்துக் கொண்டிருந்த மக்களே அதிகம். இத்தகைய சந்தேகம் புகுந்து குடைந்து கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் புனிதமானவை என்று நெடுங்காலமாக நம்பிக் கொண்டிருந்த முறையிலே, பற்றற்று நடந்து கொண்டிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/59&oldid=1768905" இலிருந்து மீள்விக்கப்பட்டது