உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

ஒளியூரில்‌

அந்த அறிவாலயம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார், பூபதியார், மகளுடன்; நாலு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில்.

அதோ, தெரிகிறது, தொலைவில்—குதிரையின் குடல் அறுந்துவிடும் வேகத்தில் செலுத்துகிறான்.

மல்லிகா!

மல்லிகா!

வண்டியில், பாதித் தூக்கத்தில் இருந்த மல்லிகாவுக்கு, இன்பக் கனவு போலிருக்கிறது, அந்தக் குரலொலி.

பூபதியார் வண்டியை நிறுத்தச் சொன்னார்; கீழே இறங்கி நின்றார்; வாசமல்லிகா விழித்துக் கொண்டு கொள்ளைக்காரனோ என்ற பயத்துடன் பார்த்தாள்.

குதிரை நின்றது; கடிவாளம் அறுந்தது;

“ஐயனே! என்னை மன்னித்தருளும்” என்று பூயதியார் பாதத்தில் வீழ்ந்தான் ராமப்பிரசாதன்.

“என்ன இது? மகனே எழுந்திரு...”

“ஐயோ! நலந்தாவுக்குத் தீமூட்ட, சதி நடந்திருக்கிறது. சதிகாரன் என்னைப் பெற்ற மாபாவி! சடைமுடிதரித்த சண்டாளனுக்குத் துணை—உடந்தை.”

“நலந்தாவுக்கு தீ! என்ன ராமப்பிரசாத்! மன மருட்சியில் பேசுகிறாயா?”

“இல்லை ஐயனே, இல்லை! ஆரிய வஞ்சகர்கள், அந்த அறிவாலயத்தை அழித்துவிடவும், அதிலுள்ள புத்த சாதுக்களைச் சாகடிக்கவும், நாளையதினம். நலந்தாவைக் கொளுவிடச் சதி செய்துவிட்டார்கள். நீங்கள் அனுப்பியிருக்கிற செம்மரத் தூண்களிலே இந்த அழிவுக்கான அரக்குப்பொடி அடைக்கப்பட்டிருக்கிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/82&oldid=1771316" இலிருந்து மீள்விக்கப்பட்டது