பொன்னேதான்!
9
தன்னிடம் அன்போ, அக்கரையோ எவரும் காட்ட முன்வராததையும், எதற்கெடுத்தாலும் ஏளனம் பேசவும் ஏசவும்,அடிக்கவும் உதைக்கவுமே பலரும் துடித்தனர் என்பதையும் கண்டுகொண்ட பிறகு, முத்துவுக்கு ஒரு வெறுப்புணர்ச்சியே வளர்ந்துவிட்டது. இந்த உலகத்தில் தன்னை வாழவைக்க ஒருவருக்கும் மனம் இல்லை என்று முடிவுக்கு வந்தான். ஈ, எறும்பு இவைகளைக் கண்டவர்கள் அடிக்கவாவது செய்கிறார்கள்; இல்லை என்றால் எப்படியோ ஆகட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். அதுபோல, மனித உருவத்தில் தன்னைக் காண்கிறார்களே தவிர, ஈ எறும்புக்குச் சமம் என்றுதான் ஒதுக்கித்தள்ளுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டான். முதலில் கோபம், வருத்தம் ஏற்பட்டது. பிறகு அந்த உணர்ச்சிகள் மறைந்துவிட்டன. ஒரே வெறுப்பு, உலகத்திடம். ஒருவிதமான துணிவு! எவரும் தன்னை எதுவும் செய்ய முடியாது;என்ற துணிவு.
மூங்கிலை,பயன்படும்படியாக வளைத்து வைக்க, அது இளசாக இருக்கும்போது முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்பார்கள் அல்லவா! சிறுவனாக இருக்கும்போதே, முத்துச்சாமியைப் பக்குவப்படுத்தி இருக்க வேண்டும். அதற்கா அப்பாசாமிக்கு நேரம் இருந்தது. எலும்பு முறிய, விடியற் காலையிலிருந்து விளக்கு வைக்கும் வரையில் பாடுபட்டாலும்,'சோம்பேறி! தடிக்கழுதை!' என்று ஏசுகிறார். நேரம் ஏது, மகனுக்கு நல்வழி இது; தீது இது என்று எடுத்துக்காட்ட-முறையாக எடுத்துச்சொல்ல, திறமை உண்டா அப்பாசாமிக்கு என்பதேகூடச் சந்தேகம். உருட்டி மிரட்டி, தட்டித் தடவி, மகனை வளர்க்கவே நேரம் கிடைப்பதில்லை.
'உன் மகன் செய்த அக்ரமத்தைக் கேட்டயா'..என்று வள்ளி சொல்ல வருவாள்; 'உன் பிரசங்கத்தைக் கேட்க எனக்கு நேரமில்லை! எஜமானர் எலுமிச்சம் பழம் வாங்கி வரச் சொல்லிவிட்டார். இலுப்பூர் சந்தைக்குப் போயாகணும்!' என்று கூறிக்கொண்டே, அப்பாசாமி ஓடுவார்; இரண்டொரு தடவை 'நல்லபடி' சொல்லியும் பார்த்தார்; அடித்தும் பார்த்தார்; முத்துச்சாமி திருந்துவதாகக் காணோம்.