பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தையர்கள்‌ மனவருத்தம்

145

யும் கூட்டிக் கொண்டு வழிக்கு வேண்டிய சாமான்களையும் எடுத்துக்கொண்டு, எங்களுக்குச் சொந்தமான ஒரு யாத்திரை வண்டியின் மேலேறிக் கொண்டு கிழக்கு ரஸ்தா வழியாகப் பிரயாணம் புறப்பட்டேன். எல்லாரும் தாங்கள் போகிற ஊரை நிச்சயித்துக் கொண்டு அந்த ஊருக்குப் போகிற மார்க்கமாய்ப் போவார்கள். நான் இன்ன ஊருக்குப் போகிறதென்ற நிச்சயமில்லாமல் கிழக்கு ரஸ்தாவைப் பிடித்துக்கொண்டு அதி துரிதமாய்ப் போனேன். நான் போகும்போது என்னுடைய தேகம் மட்டும் கூட வந்ததே தவிர என் மனம் கூடவராமல் என் தாயாரிடத்திலும் ஞானாம்பாளிடத்திலும் தங்கிவிட்டது. வழியில் என்ன அதிசயமென்று யாராவது கேட்டால் எனக்கு இன்னதென்று தெரியாது. மறுநாள் மத்தியான்னம் எங்கே தங்கியிருந்தோம், என்ன ஆகாரம் செய்தோமென்பதை வேலைக்காரர்களைக் கேட்கவேண்டுமே தவிர எனக்கு யாதொன்றும் தெரியாது; என் பிராணன் மனம் முதலியவைகளை யெல்லாம் சத்தியபுரியில் வைத்து விட்டு, நான் ஒரு சஞ்சாரப் பிரேதம் போல் சென்றேன். அன்றையத் தினம் ஐந்து காதவழி நடந்து இராத்திரிப் பத்து மணிக்கு நல்லூர் என்னும் கிராமத்தை அடைந்தோம். அந்த ஊரில் சத்திரத்தில் ஒரு தனிமையான இடத்தில் பஞ்சணையை விரித்துப் படுத்துக்கொண்டேன். என்னுடைய வேலைக்காரர்கள் சமையல் செய்வதற்காகப் போய் விட்டார்கள். நான் முகம் மறைய முக்காடிட்டுப் படுத்துக்கொண்டு இனி மேல் ஞானாம்பாளைப் பார்க்கும்படி யாயிருக்குமோ, அல்லது அவளைப் பார்க்கக்கூடாதென்று என் பிதா சொன்ன வாக்கியமே நிறைவேறிப் போகுமோ என்று மனங் கலங்கி எண்ணாததெல்லாம் எண்ணிக்கொண்டு படுத்திருந்தேன். நான் படுத்த சற்று நேரத்துக்குப் பின்பு யாரோ வந்து என்னைத் தட்டினார்கள். நான் என்னுடைய முக்காட்டைத் திறந்து பார்க்க ஞானாம்பாள் வந்து நிற்பது போலத் தோன்றிற்று. இது கனவோ அல்லது

10