பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi

சாதனங்கள் இல்லை என்று கூறுவது எவ்வாற்றானும் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் அமைந்ததன் பயனாய், பல நூற்றாண்டுகளாக நாம் அறிந்துகொள்ள முடியாத நிலையில் மறைந்து கிடந்த நம் தமிழக வரலாறும் சிறிதுசிறிதாக வெளிவரத் தொடங்கியது. நம் முன்னோர்களின் வரலாறுகளையும் மாண்பினையும் முதலில் நமக்கு உணர்த்தியவர்கள் ஐரோப்பிய ஆசிரியர்களே யாவர். நம் இந்திய அரசாங்கத்தினரும் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்வெட்டிலாகா ஒன்று நிறுவித் தக்க அறிஞர்களைக்கொண்டு கோயில்களிலுள்ள கல்வெட்டுக்களைப் படி எடுப்பித்தும் நிலத்தை அகழ்ந்து புதைபொருள் ஆராய்ச்சி செய்வித்தும் ஆங்காங்குக் கிடைக்கும் செப்பேடுகளையும் பழைய நாணயங்களையும் சேகரித்தும் அவற்றால் அறியக் கிடக்கும் பழைய வரலாற்றுண்மைகளை ஆராய்ந்து வெளியிட்டு வந்தனர். அந்நியர் ஆட்சியினால் நம் நாட்டில் பல தீமைகள் ஏற்பட்டிருத்தல் உண்மையே யெனினும் அதனால் சில நன்மைகளும் கிடைத்துள்ளமையை நாம் மறந்துவிட முடியாது. அத்தகைய நன்மைகளுள் நமது பழைய வரலாற்றை நாம் அறிந்துகொள்ளுமாறு அரசாங்கத்தினர் கல்வெட்டிலாகா மூலம் செய்துவந்த அரிய செயல்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

இனி, ஐரோப்பிய ஆசிரியர்களின் ஆராய்ச்சி முறையைப் பின்பற்றி நம் நாட்டறிஞருள் சிலரும் நம் பண்டைச் சரிதங்களை ஆராய்ந்து ஆங்கிலமொழியில் நூல்கள் வெளியிட்டுள்ளனர். தமிழ்மொழி யொன்றே கற்ற நம் நாட்டு மக்களுக்கு அவ்வரிய நூல்கள் பயன்படமாட் டாவெனினும் நமது வரலாற்றைப் பிற நாட்டாரும் உணர்தற்கு அவை பெரிதும் பயன்படுமென்பதில் ஐய மில்லை. எனவே, தமிழொன்றே கற்ற நம்மனோர் இன்னும் அறிந்துகொள்ள முடியாத நிலையில்தான், நம் நாட்டின் பழைய வரலாறு உள்ளது. ஆகவே, அத்தகைய வரலாற்று நூல்களை நம் தமிழ் மொழியில் ஆராய்ந்து வெளி