பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiii

1917-ஆம் ஆண்டில் யான் கும்பகோணம் வாணாதுறை உயர்தரக் கலாசாலையில் தமிழாசிரியனாயமர்ந்த பிறகு ஓய்வு கிடைத்தபோதெல்லாம் வரலாற்றாராய்ச்சி செய்து வந்தமையோடு சில ஊர்களுக்குச்சென்று கல்வெட்டுக்களைப் படியெடுத்துக்கொண்டும் வந்தேன். அக்கல்வெட்டுக்களையும் எனது ஆராய்ச்சியிற் கண்ட முடிபுகளையும் சரித்திர உண்மைகளையும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'செந்தமிழி’லும் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் 'தமிழ்ப் பொழிலி’லும் அவ்வப்போது யான் வெளியிட்டு வந்ததை அன்பர் பலரும் அறிவர்.

1930-ஆம் ஆண்டில் முதற் குலோத்துங்க சோழன் என்ற நூலையும் அதன் பின்னர், பாண்டியர் வரலாறு என்ற நூலையும் யான் வெளியிட்டபோது, சென்னையிலும் அண்ணாமலை நகரிலுமுள்ள பல்கலைக் கழகங்கள் அவ்விரு நூல்களையும் நன்கு மதித்துக் கல்லூரி மாணவர் கட்கும் வித்துவான் மாணவர்கட்கும் பாட புத்தகங்களாக அமைத்து ஆதரித்தமை எனக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. பிறகு, சோழர் வரலாற்றை ஆராய்ந்து விரிவாக எழுதவேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் நிலைபெற்றிருந்தது. ஆனால், அதற்குத் தக்க வாய்ப்பும் ஓய்வும் கிடைப்பது எனக்கு அரிதாயிற்று. அதனால் அவ்வெண்ணமும் முயற்சியும் தளர்ந்து போயின. அந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழாராய்ச்சித்துறையில் ஓர் ஆசிரியனாக அமர்ந்து தமிழ்த்தொண்டாற்றும் பேறு இறைவன் திருவருளால் எனக்குக் கிடைத்தது. அந்நாட்களில் பல்கலைக் கழகத் தின் துணைவேந்தராக விளங்கிய காலஞ்சென்ற சர். சே. வி. ரெட்டி நாயுடு அவர்கள் யான் செய்யத்தொடங்கும் ஆராய்ச்சி யாது என்று வினவினார்கள். யான் அவர்கள் ஆணையின்படி நடக்கும் கடப்பாடுடையேன் என்றும் தென்னிந்திய வரலாற்றில் சோழர் சரித்திரம் எழுதுங் கருத்துடையேன் என்றும் விடையிறுத்தேன். அவர்கள், தென்னிந்திய வரலாற்றை ஆராய்ந்தெழுதுவது மிகக் கடினமான வேலை என்றும் முடியுமானால் செய்யலாம் என்றும்