பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

விட்டு வந்தால் கிராமமே புகழும். அந்த திருஷ்டிதானோ என்னவோ,குஞ்சம்மாவையும் என்னையும் அனாதையாக்கி விட்டு, அவரை மட்டும் தெய்வம் கொண்டுபோய்விட்டது. அதிலிருந்து இது என்ன சொன்னாலும் நான் மறுக்கிறதில்லை. வேஷத்தைப் போட்டுவிட்டு அரிதாரத்தைப் பூச, வந்து பார்த்தேன் பெண்ணைக் காணோம். ‘குஞ்சம்மா குஞ்சம்மா' என்று கத்தினேன்; பதில் இல்லை. அக்கம் பக்கம் எல்லாம் தேடினேன். தெரு முனையில் பார்த்தேன். இந்தப் பெண் நின்றுகொண்டிருந்தாள். அசப்பில் குஞ்சம்மாள்தான் என்று குடிசைக்குள் அழைத்துச் சென்றுவிட்டேன். அரிதாரத்தைப் பூசக் கொண்டு போனேன்; கையைத் தட்டினாள். வேஷத்தைக் கலைக்கலாம் என்று தலையைப் பிரித்தால் என் பெண்ணின் நீண்ட கூந்தலைக் காணோம்; டோப்பா தலையாக இருந்தது.

"முகத்தைப் பார்த்தேன்; குரலைக் கேட்டேன். அதே அழகு, அதே சிவப்பு; ஆனால், என் பெண் எங்கே? இவள் யார் என்று என்னைப் பயம் பிடித்துக்கொண்டது.

"நீ யார்?" என்றேன். பதிலுக்கு "நீ யார்?" என்று அதே கேள்வியைத் திரும்ப என்னைக் கேட்டாள். பிறகு, என்னை "ஷூட்டிங்குக்கு அழைத்துப்போ ...." என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு வழியில் யாரோ கூறினார்கள், 'சினிமாக் கம்பெனிக்காரர்கள் நம் கிராமத்துக்கு வந்து படம் பிடிக்கிறாங்க' என்று.

"இதுதான் கதை; அதோ உங்கள் குழந்தை. நான் குஞ்சம்மாவை அழைத்துப் போகிறேன்" என்று அந்த ஸ்திரீ கூறி நிறுத்தினாள்.

உடனே டைரக்டர் பளிச்சென்று "அது தான் முடியாது. இனிமேல் குஞ்சம்மாள் உங்கள் பெண் அல்ல!" என்றார்.