பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
ரா. சீனிவாசன்
27
 


உள்ளே நுழைய இயலும்? காவலர் கடுமை அவனைத் தடுத்து நிறுத்தியது; மற்றும் கள்வர் போல் பிறர்மனையுள் புகுதல் கீழ்மையாகும். கண்ணியம் குறையும்; அவளை நண்ணுவது எப்படி?

ஏன் தேவர்களையே கேட்டு விடுவது என்று முடிவு செய்தான்.

“ஏவலை ஏற்கிறேன்; காவலைக் கடப்பது எவ்வாறு? அது தெரியாமல் திகைக்கின்றேன்” என்று தெரிவித்தான்.

நளனை ஏற இறங்கப் பார்த்தான். அவன் நேர்மை கண்டு மதித்தான்.

“நீ அவளைக் காணச் செல்க, யாரும் உன்னைக் காண மாட்டார்கள்” என்றான் இந்திரன்.

இந்திரன் தேவன்; அவன் உதவியால் மறைந்து செல்ல இயன்றது; அடுத்து நகரின் உள் வாயில் நுழைந்தான்.

திசை முகந்த தெருக்களைக் கண்டு வியந்தான். இசை முகந்த வாயினைக் கண்டான். பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தனர். தமிழ் ஆராய்ந்த புலவர்களையும் கண்டான். கலைச் சிறப்பு மிக்க நகர் என்பதைக் கண்டு மகிழ்ந்தான்.

இந்த நாடு உண்மையில் தேவர் வாழும் பொன்னாடு என்று தனக்குள் கூறிக் கொண்டான். அதை மிகவும் பாராட்டினான். இந்த விதர்ப்பன் நாடு இந்திரன் பொன்னாடு போன்றது என்று மதிப்பிட்டான்.

கன்னியர்கள் மட்டும் தங்கியிருந்த அழகிய மாடத்தை அடைந்தான். அன்னம் உரைத்த அரண்மனை அது என்பதை அறிந்தான். அருகே அழகிய சோலை; பொய்கைகள் இருந்தன.