பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
ரா. சீனிவாசன்
35
 


வந்தால் அதற்காக வாடி வருந்துபவள் அவள். அதன் மென் காற்று அசைவுக்கும் அவள் தாங்காதவள். வனமுலை அவளுக்குச் சுமை என்று கருதிச் சுமப்பவள்; அவள் இப்பொழுது இந்தக் கடுமையான காதல் வெள்ளத்தில் அவளால் எப்படி நீந்த முடியும்?

மோகச் சுழியில் முழுகி அவள் வெளிவர முடியாமல் மனம் சுழன்றாள். அவளால் துயர் தாங்க முடியவில்லை.

“குளிர்ச்சி மிக்க இள நிலாவே! இவ்வாறு உன் ஒளிக்கதிர்களை என் சோர்ந்த கூந்தலில் சொரிவது ஏன்?” என்று கேட்டாள். மன்மதன் உன்னை ஏவி விட்டு என்னை வருத்துகிறானோ! அவன் உனக்கு மாலை சூட்டிப் பாராட்டுகிறான். எதற்காக என்னை வாட்டுகிறாய்” என்று நிலவினை நோக்கித் தன் நிலைமையினை எடுத்து உரைத்தாள். “மதியே! உன்னைத் தூண்டி விட்டான் மன்மதன். இந்த விடியாத இரவையும் அவன் உனக்குத் துணையாக அனுப்பி வைத்திருக்கிறான்” என்று கடிந்து கூறினாள்.

நிலவின் ஒளி அழல்போல் அவளை எரித்தது. சூடி இருந்த பூவும் வெப்பம் பெற்றது. நாடி வந்த வண்டுகளும் வெப்பத்தால் சுருண்டு போயின.

அவள் கண்களில் நீர் அருவிபோல் கொட்டியது. வளையல்கள் நெகிழ்ந்தன. கையில் தலை வைத்து உறக்கமின்றி அந்த இரவினைக் கழித்தாள். இரவு எல்லாம் தனிமையில் தவித்தாள். கடுந்தவம் இயற்றுபவள் போல் நின்றாள். அவனை அடைவது குறித்து நினைத்து வேதனை உற்றாள்.

இரவுப் பொழுது அவளை மிகவும் வாட்டியது. “பொது மகளிர் தம் இதயம் போல் அந்த இரவு இருளைப் பெற்றுக் கிடக்கிறது” என்று கூறினாள். தீ கொண்டும் மாய்க்க முடியாத இருளாக அது அவளுக்கு விளங்கியது.