பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
ரா. சீனிவாசன்
59
 

அவனைக் கெடுப்பதற்கு வழி யாது? அவன் தமையன் உறவினன்; அவனை அணுகினான் அவனுடன் பேசினான்.

“உனக்குப் பரிசுச் சீட்டுக் காத்திருக்கிறது” என்றான்.

அவன் அதை நம்பவில்லை; “ஒன்றுவைத்தால் நூறு பெறலாம்” என்றான்.

அது அவனுக்கு வியப்புத் தந்தது.

ஏதோ புதுப்படம் எடுத்துக் கோடி கணக்கில் பணம் ஈட்டலாம் என்று தூண்டி விடுவதுபோல் அது இருந்தது. அதில் சறுக்கி விழுபவர் பலர். அந்த மாதிரி ஏதோ வழிகாட்டுகின்றான் என்று நினைத்தான்.

“குறுக்கு வழிகள் பல இருக்கின்றன பொருள் ஈட்ட” என்றான்.

“அரசியலுக்கு அறிமுகம் செய்கிறான்” என்று நினைத்தான் புட்கரன். அவன் அந்நாட்டு மன்னன்.

“காய் உருட்டு; அதன் வழி பொருள் திரட்டு” என்று கூறினான் கலி.

“சூது ஆடுவது தீது” என்று சுட்டிக் காட்டினான் புட்கரன்.

“உழைப்பது என்பது உத்தமர் செயல்; நம்மைப் போன்றவர் உழைக்க முடியாது. யுத்தம் செய்வது வீரர் செயல்; அது நமக்குப் பழக்கம் இல்லை.”

“கத்தியின்றி ரத்தமின்றிச் செய்யப்படும் யுத்தம் ஒன்று உள்ளது. அதுதான் சூதாட்டம்” என்றான்.

ஏதோ நாமக்கல்லார் கவிதையைக் கூறுகிறான் என்று எதிர்பார்த்தான். நாமம் சார்த்தும் செய்தியாக அது இருந்தது.