பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்098

யில் அவருக்கு ஒரு தோல்வியாக முடிந்தது. ‘குரலின் உச்சி’யில் (At the Top of One’s voice) என்ற அவருடைய கவிதை வெற்றிப் படைப்பு என்றாலும், யாரிடமிருந்து அதற்குப் பாராட்டுக்கள் வரவேண்டுமென்று எதிர்பார்த்தாரோ அவர்களிடமிருந்து எந்தப் பாராட்டும் வரவில்லை. நிறைந்த எதிர்பார்ப்போடு எழுதப்பட்ட ‘குளியல் அறை’ (The Bath-House) என்ற நாடகமும் தோல்வியடைந்தது. மாஸ்கோ இலக்கியவாதிகளும் விமர்சகர்களும் அந்த நாடகத்தை அலட்சியப் படுத்தியதோடு, அதைப் பாராட்டியோ, எதிர்த்தோ எதுவும் எழுதவில்லை. இது விளாடிமிரோவிச்சின் உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது.

“அக்டோபர் புரட்சியின் பத்தாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டபோது, புரட்சியின் பிரச்சார இயக்கத் தலைவர் என்ற முறையில் லெனினைப் பற்றியும், சோவியத் நாட்டைப் பற்றியும் பாராட்டிக் கவிதைகள் எழுதியிருந்தாலும், சோவியத் அரசின் செயல் திட்டங்களும், சாதனைகளும் விளாடிமிரோவிச்சிற்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தன. அவருடைய கற்பனை வரண்டு விட்டது என்று சொல்லி அவரது சோவியத் பிரச்சார எழுத்துக்களை மாஸ்கோ இலக்கிய வாதிகள் கேலிசெய்தனர்.”

“அவரது இலக்கிய வாழ்க்கையில் இருபதாவது ஆண்டு விழாவை நண்பர்கள் கொண்டாடியபோது, சோவியத் அரசாங்கம் எந்தவிதமான ஆதரவோ, பாராட்டோ வழங்கவிலை.”

“ஓயாத உழைப்பால் அவர் உடல் நிலை சீர்கெட்டிருந்தது. அடிக்கடி மூட்டு வலியாலும், ஃப்ளு காய்ச்சலாலும் அவதிப்பட்டார். இவ்வாறு பலவித இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆட்பட்டிருந்த விளாடிமிரோவிச்சிற்கு என் உறவு ஆறுதலாக இருந்தது. அலை கடலில் அவதிப்பட்ட அவருக்கு நான் ஒரு துரும்பாகக் கிடைத்தேன். நானும் அவரோடு கருத்து வேறுபாடு கொண்டபோது, சாவை நோக்கி அவர் விரைந்தார்”

மாயகோவ்ஸ்கி உயிரோடு வாழ்ந்த காலத்தில் லெனினோ ஸ்டாலினோ அவனை மதித்துப் பாராட்டவில்லை. சோவியத் அரசாங்கமும் அவனைப் புரட்சிக் கவிஞனாக அங்கிகரிக்கவில்லை. ஐரோப்பிய இலக்கிய வாதிகளும் அக்காலத்திய ‘புஷ்கினாக’ அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. அக்மடோவா, பாஸ்டர்நாக், மேண்டெல்ஸ்டாம், ஸ்வெட்டேவா ஆகியோருக்கு அடுத்த நிலையிலேயே அவனுக்கு இடம் ஒதுக்கினர். 1985-இல் பொதுவுடைமைக் கட்சியின் வேண்டுகோளின்படி ஸ்டாலின் மனந்திறந்து மாய கோல்ஸ்கியைப் பாராட்டி அறிக்கை விட்டார். அதன் பிறகே