பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சர்ரியலிசம், சிம்பலிசம் என்னும் இயக்கங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கி, கலை கலைக்காகவே என்று குரல்கொடுத்த பிரெஞ்சுக் கவிஞன் போதேலேர், போதேலேரின் அடிச்சுவட்டில் விடலைப் பருவக் கனவுகளை விதவிதமாய் வெளிப்படுத்தி, உரைநடைக் கவிதைமூலம் பிரெஞ்சுக் கவிதையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய ரெம்போ, இறுக்கமும் சுருக்கமும் கொண்ட கவிதைகளைத் தந்த ஜெர்மனியின் தலைசிறந்த ஆன்மிகக் கவிஞர் மேரியா ரில்க், படிம இயக்கத்தைத் தோற்றுவித்து ஜப்பானிய ஹைக்கூத் கவிதைகளை உலகறியச் செய்த எஸ்ரா பவுன்ட், குறியீடும் அங்கதமும் அமைந்த கவிதைகளைப் படைத்தளித்து, பாழ்நிலம் மூலம் நோபல் பரிசு பெற்ற மரபிலக்கியத் திறன் மிக்க டி. எஸ் எலியட், எந்த இலக்கிய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் புதுக்கவிதைகில் கிராமியப்பாடல் புனைவதில் புகழ்பெற்ற ஸ்வெட்டேவா, ருசியப் பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சி எரிமலை மாயகோவ்ஸ்கி, மரபிலும் புதுமையிலும் நல்லதை அறுத்து நல்லதை விதைத்த ஸ்பெயின் நாட்டு கார்சியா லார்கள், மானுடம் பாடிய ஜெர்மனியின் மார்க்சியக் கவிஞன் ப்ரெக்ட், அரசியல் வெளிப்பாடும் நடப்பியலும் அமைந்த புரட்சிக் கவிதைகளைப் படைத்துப் பொதுவுடைமைச் சங்கநாதம் செய்த சிலியின் பாப்லோ நெருடா ஆகிய பத்துக்கவிஞர்களைத் தமிழ்ப் புதுக்கவிதை வாசகர்களுக்குச் சுருக்கமாகவும் சுவையாகவும் தெளிவாகவும் அறிமுகப்படுத்துகிறது. இந்நூல்.

பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் பனித்துளிகள் கடைதிறப்பு, தீர்த்தக்கரையினிலே, எரிநட்சத்திரம் போன்ற சிறந்த நூல்களின் ஆசிரியரான கவிஞர் முருகுசுந்தரத்தின் அரிய உழைப்பும் படிப்பும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது.