பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்னால் காதலைச்
சாளரத்துக்கு வெளியே
தூக்கி எறிய முடியாது.

 



ஆர்தர் ரெம்போ
(1854–1891)


ரெம்போ பிரெஞ்சு நாட்டு ஞானசம்பந்தன் பிஞ்சுப்பருவத்தில் எழுதத் தொடங்கித் தனது 19 ஆம் வயதில்-கவிதைத் தொழிலை முடித்துக் கொண்டவன். ஐந்தாண்டுக் காலத்தில் அவன் எழுதிய சொற்பக் கவிதைகள் ஐரோப்பியக் கவிதைப் போக்கையே மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்றவையாக விளங்கின. அவன் கவிதை வாழ்க்கை கண நேரத்தில் மின்னலைப் போன்றது; சீறும் புயலைப் போன்றது. கோடை மழையைப் போல் திடீரென்று கொட்டி விட்டு ஓய்ந்து போனவன் ரெம்போ இந்த வாமன வசந்தத்தைப் பாராட்டாத மேலை நாட்டு இலக்கியவாதி யாருமில்லை.

பிரெஞ்சு நாட்டின் வட பகுதியில் சார்லிவில் என்ற சிறிய நகரில் 1954-இல் பிறந்தான் ரெம்போ. இவன் தந்தை ஃப்ரெட்ரிக் ரெம்போ பிரெஞ்சுப் படையில் ‘கேப்டன்’ பதவி வகித்தவர். அவர் இராணுவப் பணி பெரும்பாலும் அல்ஜீரியாவில் கழிந்தது. ஃப்ரெட்ரிக் ரெம்போ அரபு மொழியை நன்கு கற்றவர். குரானை பிரெஞ்சில் மொழி பெயர்த்தவர்.

கவிஞன் ரெம்போவின் தாய், கண்டிப்பும் அடங்காப் பிடாரித் தனமும் மிக்கவள். அவளோடு வாழத் தாக்குப் பிடிக்க முடியாமல், கவிஞன் ரெம்போ ஆறுவயதுச் சிறுவனாக இருக்கும் போதே, அவன் தந்தை ஃப்ரெட்ரிக் வீட்டை விட்டு ஓடி விட்டார். அதன் பிறகு ரெம்போவோ, அவன் தாயோ அவரை மீண்டும் சந்திக்கவே இல்லை.