பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்68

மாறியபிறகு அந்நாட்டின் சமயத்தையும் பண்பாட்டையும் முழுமையாக ஏற்றுக்கொண்டார். ஆங்கில மக்களைப்போல வரிக்கோடு போட்ட காலுறையும் (Striped Trousers) கருப்பு மேலங்கியும் அணிந்து கைக்குடை தொப்பிசகிதமாகக் காட்சியளிப்பார். மொழியைக்கூட ஆங்கிலேயரைப்போல ஒலிக்கக்கற்றுக் கொண்டார். அமெரிக்கத் தனித்தன்மை உருவாகக் காரணமாக இருந்த சமயக்காழ்ப்பு, குடியேற்றம், சுதந்திரப்போர் ஆகியவற்றை அடியோடு மறந்து நூற்றுக்கு நூறு ஆங்கிலேயராகவே வாழ்ந்தார்.

லீயர் மன்னன் தன்னைப்பற்றித் தானே கூறிக் கொள்வதைப் போல, எலியட்டும் தம்மைப் பற்றிச் சரியான கவிதை ஓவியத்தைக் கீழ்க் கண்டவாறு வரைந்து காட்டுகிறார்:

எழுத்தரின் சாயல்;
கடுகடுப்பான புருவம்;
போலிப் புன்னகை உதடுகள்.

கனவான் எலியட்டைக்
காணச் சகிக்கவில்லை,
இனிய பேச்சு;
‘ஆனால் , . என்ன . . . கசசிதம்
இருந்தாலும் இருக்கலாம்’
என்ற இடை வெட்டுகள்,

“நான் பழஞ் சிறப்பியவாதி (Classicist); ஆங்கிலோ-கத்தோலிக்கச் சமயவாதி” என்று கூறிக் கொள்வார். புனைவியக் கவிஞர்கள் (Romantic poets) வாழ்ந்த காலத்துக்கும் எலியட் வாழ்ந்த காலத்துக்கும் நிறைய வேறுபாடுண்டு.

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் மக்களைச் சிந்திக்கும்படி தூண்டின. அவர்கள் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. ‘ஏன்? எப்படி?’ என்ற பகுத்தறிவுக் கேள்விகளைப் போட்டு ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள விரும்பினர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் நிலப்பிரபுக்களின் ஆட்சியும், செல்வாக்கும் சரிந்து, தொழிலதிபர்கள் செல்வாக்குப்பெறத் தொடங்கினர். அதனால் கிராமங்களை விடத் தொழில் நகரங்கள் பெரிதும் வளர்ச்சி சேற்றன. நகரங்களை நோக்கி மக்கள் குவியத் தொடங்கினர். அளவற்ற மக்கட் பெருக்கத்தால் நகரங்களில் சுகாதாரக்கேடும், ஒழுக்கக் கேடும், வறுமையும், மணமுறிவும் நிறைந்து காணப்பட்டன.

ஃப்ராய்டு, ஜங் போன்ற உளவியல் அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவுகள் எல்லாத் துறைகளிலும் பெரிய பாதிப்புகளை