பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

புதியதோர் உலகு செய்வோம்



ஆடவர்களுக்கிடையே குடும்ப ஐக்கியம், சமுதாய உறவுகள் பெரிதாகப் பாராட்டப்பட்டு, கெளரவிக்கப்பட்டிருப்பதுபோல், பெண்களுக்கிடையே நிலைப்படுவது, கூடாது என்று அஞ்சும் வகையில் அந்த உறவுகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலை ஏன்?

கூர்ந்து நோக்கினால், மிகப் பழைய காலத்திருந்தே, குடும்ப அமைப்புக்கள் சார்ந்தும், சமுதாய, சமய அமைப்புக்கள் சார்ந்தும் பெண் ஆணுக்குச் சமமான மதிப்புடையவளாகக் கருதப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகும்.

சொல்லப் போனால், பெண்தான் சமுதாயத்தின் தூலமான வளர்ச்சிக்கோ, அல்லது நலிவுக்கோ காரணியாக இருக்கிறாள். இயற்கையளித்திருக்கும் தாய்மைப் பொறுப்பு, அவளைத் திண்மை, நொய்ம்மை என்ற இரு கூறுகளுக்கும் உடையவளாக்கியிருக்கிறது. உணர்ச்சிமிகு இயல்பினால் உயிர்க்கருவை ஏந்தித் தன்னுள் ஒரு பகுதியாகச் சுமந்து, அதன் ஆக்கத்துக்கும் எதிர்கால வளமைக்கும் தானே முழுதுமாகப் பொறுப்பேற்கிறாள். உலகின் தலையாய நோவை உடற்பரமாகப் பொறுக்கிறாள். அதன் பிரதிபலிப்பாக, உள்ளத்தில் தனக்கென வாழாத் தன்மையை இயல்பாகப் பெற்றுவிடுகிறாள். இவள் இல்லையேல், மனித சமுதாயமே இல்லை. இத்தகைய ஆதாரமான சிறப்பியல்பு பெண்ணை அடைந்திருந்த போதிலும், அதற்குரிய வகையில் அவள் உயர் மதிப்பைப் பெற்றிருக்கவில்லை. மாறாக, அந்தத் தனிப் பொறுப்புக்களே அவளுடைய சுதந்தரமான இயக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் அவள் ஒரு மானுடப் பிறவி