பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

புதியதோர் உலகு செய்வோம்

ஆண் அவளைப் போற்றிக் காக்க, பொருள் தேடிக் கொண்டு வர வெளியில் சென்றான். பெண் இருப்பிடத்தில் ஊன்றி உழைத்தாள். நீர் கொண்டு வந்தாள்; நெருப்பைப் பாதுகாத்தாள், உணவு படைக்கும் பொறுப்பை ஏற்றாள்; கன்று காலிகளைப் பராமரித்துப் பாதுகாத்தாள். ‘துஹித’ என்று மகளைக் குறிப்பிடும் சொல்லே, பெண் பால் கரப்பவள் என்ற பொருளைக் காட்டுகிறது. ஆனால் இவளுடைய உழைப்பு சிறந்ததாக மதிக்கப் பெறாமல், பொருள் தேடி வரும் ஆணுடைய நிலையே, உயர்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?

மக்கட்செல்வம், ஒரு தனி மனிதனின் படைபலத்துக்கு இன்றியமையாததாயிற்று. பொருள் தேடி வந்து பெண்ணுக்கு அளித்துப் போற்றுபவன் ஆதரிப்பவனாக, முதன்மை பெற்றான். தன் இனம் பெருக, வம்ச உரிமையை விரிவாக்கப் பெண் தேவைப்பட்டாள். இந்த நிலையில் ஓர் ஆண் பல பெண்களுடன் வாழ்ந்து மக்களைப் பெறலாம் என்பதும் நியாயமானதாக ஆயிற்று. ஒரு பெண்ணுக்காக ஆடவர் தமக்குள் சண்டையிடுவதும், தோற்றவர் மனைப் பெண்கள் வென்றவருக்கு உரியவராக ஆவதும், சாதாரணமாகக் கருதப்பட்டது. இவ்வாறு தொடர்ந்த காலக்கிரமத்தில் பெண், உயிரும் உணர்வும் உடைய மனிதப்பிறவியின் பெண், நிலத்தைப் போல் கன்று காலிகளைப் போல் தனிமனிதரின் உடமைப் பொருளாகித் தீர்ந்தாள்.

குடும்ப அமைப்புக்கள், இந்தத் தனிப்பொறுப்புகளை அவளுக்குக் கட்டாயமாக்கும் நெறியை வலியுறுத்தின. இது அவள் புற ஒழுக்கம் மட்டுமின்றி, மனஅளவிலும், ஒரு மனிதனுக்குட்பட்டவளாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆணுக்கு ஏகபோகமான உரிமைகளையும், அதிகாரங்-