பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

புதியதோர் உலகு செய்வோம்

காலமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தச் சிறப்பு, இன்றைய சுயநல அரசியல் இலாபங்களுக்காகக் குலைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சீர்குலைவு, சின்னஞ்சிறு பிஞ்சுகளின் தாய்மொழியறிவில், பெற்றோர், உறவினர், சூழல் என்று உலகை உணரும் உந்துதல்களில் கூடச் சுமையைக் கூட்டும் வாணிபக் கல்விக் கட்டாயங்களில் பிரதிபலிக்கிறது.

எவ்வகையிலேனும் பொருளிட்டுதலே கல்வியின் பயன் என்ற இலக்கை நோக்கிய கட்டாயப் போட்டிப் பந்தயங்களுக்கு இன்றைய தலைமுறையின் சுயமான அறிவு வளர்ச்சியும், இயல்பான மலர்ச்சிகளும் பலியாக்கப்படுகின்றன.

அந்நியர் நம்மை ஆண்ட காலங்களில் குழந்தை, மழலைக் கல்வியைத் தாய், பாட்டி, என்ற பரம்பரையில், அன்புடனும் பாச உரிமையுடனும் சுதந்தரமாக ஆடியும் பாடியும் மிக இயல்பாகப் பெற்றது. பின்னர் எழுத்தறியும் கல்வி, தாய்மொழியிலேயே புகட்டப்பட்டது.

இந்நாட்களில் கூட்டுக் குடும்பச்சூழல் இல்லை; பணிக்குச் செல்லும் தாயால் மகவுக்குப் பாலூட்டக்கூட முடியாத நிலையில் தடுமாறுகிறாள். நமது வருங்காலச் செல்வம் இன்றைய குழந்தைகளே என்ற நோக்கில், தாய்மார் குழந்தைகளைப் பெற்றபின் குறைந்தபட்சம் ஒன்றரை அல்லது இரண்டு வயது வரையிலும் பராமரிக்கத் தகுந்தபடி அரசு பொறுப்பேற்கத் தாயாருக்குப் பணி விடுப்புச் சலுகை வழங்க வேண்டும். பின்னரும், இதற்கென்றே சிறப்புக் கல்விப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் கண்காணிப்பில் மழலைப் பள்ளிகள், ஆங்காங்கு கட்டாயக் கல்விக்கு முன்னோடி இடங்களாக அமைக்கப்பட வேண்டும். இந்த மழலைப் பள்ளிகளில்