பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

53

நிலைமையை மாற்றி அமைக்க இயலாத செல்லாக் காசுகளாகவே எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றன. ஏன்?

பெண்களின் பல்துறை அறிவு சார் மலர்ச்சியும் முன்னேற்றமும் ஆக்கபூர்வம் என்று கணக்கிடுவோம். இந்த மலர்ச்சி, வரவு வருமானம், ஒட்டுமொத்தமான சமுதாய வளர்ச்சியை மேம்பாட்டுக்குக் கொண்டு செல்கிறது. அதேசமயம்,பெண்ணின் ‘நான்’ என்ற சுய உணர்வு, அறிவுசார் பண்புகளில் மேம்பட வேண்டும். அந்தப் பண்புகளில் குறிப்பிடப்பட வேண்டிய தற்சார்பாகிய விடுதலை உணர்வு; துணிவு; தன்னம்பிக்கை, உறுதி ஆகியவையாகும்.

இது ஒரு வகை வழுக்கு மரம்தான்.

இவள் சாண் ஏறுமுன், முழம் சறுக்க, தண்ணீரை அடிக்கிறார்கள்; கவனம் சிதறக் கொட்டலும் கூச்சலும், இழுத்தலும் நிகழ்கின்றன. பெண்ணுக்கு - மையழகு; இடுப்பழகு நடக்க முடியாத சீறடி அழகு, அணிபணிகள், மேலும் மேலும் அழகு சேர்க்கும்; அவளுக்கு நாணம், மூடத்தனம் எல்லாமே அழகு... இத்தகைய அழகுகளாலேயே அவள் மாட்சிமை பெறுகிறாள் - புடவைகள், மேற்பூச்சுகள், அலங்காரங்கள் என்று அவள் தன்னை மையப்படுத்திக் கொள்ளும் கருத்தியலில் இருந்து விடுபடாததால், அவளால் எத்துணை அறிவுசார் வருமானம் பெற்றிருந்தபோதிலும், முற்றிலுமாக அந்த வருமானத்தால் சமுதாயத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர முடியவில்லை. வருமானத்தைத் தேய்த்து மேலும் சுரண்டும் செலவுகளாக உடல்சார் உணர்வுகளைத் துண்டி இழுக்கும் கவர்ச்சிகள் அவளுடைய உண்மையான ஆளுமையை அமுக்குகின்றன. அல்லது அழித்து,