பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

புதியதோர் உலகு செய்வோம்

பெறாத குழந்தையின் செயல்களைப் போல் உணர்ச்சி கரமான குண்டுவீச்சுகளும், வன்முறை, தற்கொலைகளுமாகத்தான் இருந்தது. உணர்ச்சிகளை அடக்கி, மனஉறுதியும், இலட்சியத்துக்கான வலிமையுடனும் அடக்குமுறைகளைச் சாத்துவீகமாக எதிர்நோக்கும் போராட்டத்தைக் காந்தியடிகள் முதன் முதலில் செயல்படுத்தினார்.

அந்நிய நாட்டில், ரயில் வண்டிப் பயணத்தில் தாம் முதல் வகுப்புக்குரிய பயணச்சீட்டை வைத்திருந்தும், நடுவழியில் சாமான்களைத் தூக்கி எறிந்து அவரையும் வெளியேற்றியபோது, தம் ஒருவருடைய தன்மானம் மட்டும் குத்தப்பட்டதாக அவர் உணர்ச்சி வசப்படவில்லை. தாம் பிறந்த இந்திய நாட்டின் மக்கள் சமுதாயத்துக்கே ஊறு ஏற்பட்டுவிட்டதாகச் சிந்தித்தார். வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிராக, அவர் படைபலம் திரட்டவில்லை. ஆனால், அடிமைகளாக உழைத்துத் தேய்ந்த எழுதப் படிக்கத் தெரியாமல், எதிர்த்துப் பேசத் தெரியாமல், ஒடுங்கிக் கிடந்த, இந்திய மண்ணில் அடி வைத்துக்கூட அறிந்திராத மக்களின் உள்வலியில் நம்பிக்கை கொண்டார்.

உலகிலேயே முதன்முதலான அறவழிப் போராட்டம், வரலாறு பெற்றது. தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என்று கைத்தறித் துணிகள் விற்பனை மாளிகைக்கும் பெயரிடப்பட்டிருக்கிறது.

தில்லையாடியைப் பார்த்தேயிராத வள்ளியம்மை, காந்தியடிகளின் உள்ளத்தில் இந்த அறப்போராட்டத்தை நாட்டு விடுதலைக்கான முக்கிய சாதனமாகக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையின் ஆதாரமாகத் திகழ்ந்தாள் என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். கைத்தறி மாளிகைக்கு மட்டும் அவர் பெயர் வைக்க வேண்டுமா?