பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

89

நினைத்துக் கொண்டே பணியாற்ற வேண்டும். இதில் அரசுப் பள்ளிகளானால் அதிகாரிகளின் கெடுபிடிகள், மாற்றல் உத்தரவுகள் போன்ற கிடுக்கிப் பிடிகளும் உண்டு. தனியார் பள்ளிகளில் வணிகச் சூழல்; எல்லா வசதிகளும் குறைவு. மழலை தாண்டிய பருவப் பிள்ளைகளுக்குத்தான் ஆண் ஆசிரியர்கள் கற்பிக்க வருகிறார்கள். இந்த வளர் பருவ மாணவர்களுக்கு பள்ளிக்கு வெளியே கவர்ச்சிகள் அதிகம். ஒன்பதாம் வகுப்பு மாணவன் மதுவருந்திவிட்டு, வகுப்புக்கு வந்தால் ஆசிரியர் என்ன செய்வார்? அது அவனுக்கு ஜனநாயக உரிமை!

வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வாதாரத் தேவைகளுக்காக நெருங்கி மிதிபடும் குடும்பக் குழந்தைகளுக்குத் தான் ‘பிதா’ என்ற மொத்தையான பிம்பம் மனத்தில் பதிகிறது. இவன் அன்றாடம் குடித்துவிட்டு வந்து, உழைத்துப் போடும் தாயை அடிக்கிறான். ஆண் குழந்தைக்கு அவனுடைய ‘பவர்’ மனத்தில் பதிகிறது. அவனும் குடிக்கலாம்; அடிக்கலாம்; திட்டலாம். பெண் குழந்தை ஆணின் எந்த ஆதிக்கத்துக்கும் புழுவாக மிதிபட வேண்டும் என்று உணர்ந்து கொள்கிறது. கேள்வி கேட்கத் தெம்பில்லாதவளாக உழைக்க வேண்டும்.

இத்தகைய சூழல்களில் இருந்தே பல்வேறு களங்களில் தங்கள் மனிதவள ஆற்றலை நல்க, நல்ல சமூகத்துக்கு அன்னியப்படும் வன்முறைகள் பழக, ஒடுக்கல்களுக்கு உட்பட குழந்தைகள் மலர்ச்சி பெறுகிறார்கள்.

‘தினமணி’
13.11.2003