பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

புதியதோர் உலகு செய்வோம்

காலையில் சாலையில் மோதும் வாகன நெருக்கடிகளில், நூற்றுக்கணக்கில் நம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய மழலைகள் அடைப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

தாயும் தந்தையும், தங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்துப் பொருளீட்டி, இந்தப் பிஞ்சுகளின் இளம் பருவ இனிமைகளைக் கொள்ளையடிக்கும் குரூரமே மழலைக் கல்வி, சிறார் கல்வி என்ற பெயரில் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக இங்கே நடைபெற்று வருகிறது. ஒற்றையடித் தடங்களுக்கப்பால் ஒளிந்திருக்கும் கிராமங்களைத் தேடிச் சென்று பேருந்துத் தடமமைத்து அதிகாலையில் பிஞ்சு நெஞ்சங்களை அதிர வைக்கும் குழலொலியுடன் வந்து, பிஞ்சுகளை அள்ளிச் செல்லும் தீப்பெட்டித் தொழிற்சாலை வண்டிகளுக்கும் இவற்றுக்கும் அதிக வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை.

அங்கே பிள்ளைகள் கையில் தூக்குப் பாத்திரத்துடனும், பதிவுச் சிட்டையுடனும் திரும்பி வரும்போது தகப்பன், அதில் எத்தனை பதிவாகி இருக்கிறதென்று பார்ப்பான்.

இங்கே தாய், முன்னிரவில் பிள்ளையின் நோட்டைத் திறந்து பார்க்கிறாள். ஹோம்வொர்க் பூதம், பிள்ளையின் அறிவுத்திறனைத் தெரிவிக்கும் ‘மார்க்’குகள் என்று கண்காணிக்கிறாள். பெரும்பாலும் ‘டியூசன்’ என்று இன்னும் ஒரு மணி நேரம் சிறைச்சாலைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

குழந்தைக்கு மலச்சிக்கல், மனச்சிக்கல் இருக்கிறதா, உணவு கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடுகிறதா என்ற கவனம், பிள்ளை மற்றவர்களைவிட ‘மார்க்குகள்’ எடுத்து சாதனையாளனாக வளர வேண்டுமே என்ற ஒரே இலக்கில்