பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

நா. வானமாமலை

கவிதைகள் மெருகு பெறுகின்றன. சிறு பத்திரிகைகளில் முற்போக்காளர் செல்வாக்கு மிக அதிகமாகிறது. முற்போக்கு அணியில், உண்மையான மனிதநேசம், சமூக விமர்சனம், சமூக மாற்ற நுண்ணோக்கு, புரட்சி ஆர்வம் ஆகிய இயல்புகளுள் ஏதாவது ஒன்றுடைய கவிஞர்கள், சமூககதியின் செல்வாக்கினாலும் உழைக்கும் மக்களின் புரட்சிப் பெருவெள்ளத்தின் தாக்கத்தாலும் விரைவான சமூக மாற்றங்களால் தோன்றுகிற சமூக உணர்ச்சியாலும் இவையனைத்தையும் புரிந்து கொள்ளத் தேவையான பொருள்முதல் வரலாற்றுத் தத்துவஞானமும் பெற்று சோசலிஸ்டு ரியலிசப் பெருங்கவிகளாக மலர்வார்கள். இந்த நம்பிக்கை எனக்குண்டு.

சோசலிசம் என்ற குன்றின் மீதிட்ட சூரியனை நோக்கி வழி தேடி நடக்கிற கவிஞர்களனைவரும் கடைசியில் உலக மாந்தரனைவருக்கும் பொதுவான இலட்சியத்தில் ஒன்றுபடுறார்கள்.

தத்துவ நிலைகளிலும் இலக்கியக் கொள்கை நிலைகளிலும் படைப்பு முறைகளிலும் வேறுபடுகிற கவிஞர்கள், சமுதாய இயக்கத்தின் ஒத்திசைவு லயத்தோடு சேர்ந்து முன்னேறி, சோசலிஸ்டுக் கவிஞர்களாக மாறுவார்கள். இவர்கள் பல்வேறு குழுக்களாகச் சேர்ந்து கவி பாடி, குழு எல்லைகளை உடைத்துப் பெரிதாக்கிக்கொண்டு, தனியுணர்வைத் தாண்டித் தத்துவ ஒளியால் பொது உணர்வு பெற்று மாபெரும் போராட்டப் படையாக உருவாகிக் கவிதைகளை நவீன ராணுவத்தின் விமானக் குண்டுகளாக சமைத்துக் கொண்டு முன்னேறுவார்கள். எதிரிகளது தத்துவக் கோட்டைகளை அழித்து, மக்கள் தத்துவமான மார்க்சீயத்தைச் சுவரில்லாக் கோட்டையாக, காந்த மண்டலக் கோட்டையாகக் கட்டுவார்கள்.

இக்கோட்டைக்கு அடித்தளமாக வர்க்கங்கள் இல்லாத, சுரண்டுதல் இல்லாத, பிறப்பினில் வேறுபாடு இல்லாத, உழைப்பைப் பெருமையாகக் கருதும் சோசலிசச் சமுதாயம் விளங்கும்.

அப்போது, மனித நலனுக்குகந்த ஒரே குறிக்கோளின் பல்வேறு கூறுகளை, ஆயிரக்கணக்கான இசைக் கருவிகளை மீட்டி ஆயிரம் விதமாக நமது கவிஞர்கள் பாட்டிசைப்பார்கள். ‘செவியராலி’யாகப் போர்ப்பரணி முழக்கம், முதலாளித்துவக் கோட்டைகள் தகர்க்கப்பட்ட பின் மக்கள் எழுப்புகிற நல்வாழ்வு மாளிகைகளுக்கு வரவேற்புக் கூறும். வீணை நாதம் போல இனிமையாகவும் நாதசுவர இசை போலக் கம்பீரமாகவும் ஒலிக்கும்.