உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன் மகன், 'இங்குருசி' (English) படிக்க வேண்டுமென்று ஆசை. நீட்டுவானேன்? பாவாடை ஜான் ஐயருடன் சென்றான்.

ரெவரெண்ட் ஜான் ஐயர் வேளாளக் கிருஸ்துவர். முதலில் போர்டிங்கில் போட்டுப் படிக்கவைத்தார். பையன் புத்தி விசேஷம். மிகுந்த பெயருடன் 10 கிளாஸ் படிக்கும் வரை பிரகாசித்தது. இன்னும் பிரகாசிக்கும் பரமண்டலங்களிலிருக்கும் கர்த்தரின் விதி வேறு விதமாக இருந்தது.

ஜான் ஐயருக்கு ஒரு பெண் உண்டு. மேரி லில்லி என்ற பெயர். நல்ல அழகு.

அவளும் அந்த மிஷன் பள்ளிக்கூடத்தில் ஆண் பிள்ளைகளுடன் படித்தாள். எல்லாவற்றிலும் முதல் மார்க் எடுக்கும் பாவாடையிடம் (இப்பொழுது அவனுக்கு தானியேல் ஜான் என்ற பெயர்) சிறிது பிரியம், நட்பு, வரவரக் காதலாக மாறியது.

கிருஸ்தவ சமுதாயத்தில் இந்துக் கொடுமைகள் இல்லையென்று ஜான் ஐயர் போதித்ததை நம்பி, மனப்பால் குடித்த ஜான் தானியேல், ஒரு நாள் ஐயரிடம் நேரிலேயே தன் கருத்தை வெளியிட்டான்.

ஜான் ஐயரவர்களுக்கு வந்துவிட்டது பெரிய கோபம். "பறக்கழுதை வீட்டைவிட்டு வெளியே இறங்கு" என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளினார்.

மனமுடைந்த தானியேலுக்குப் பாழ்வெளியாகத் தோன்றியது உலகம். இந்த மனநிலைக்கு மதம்தானே சாந்தி என்கிறார்கள். கிருஸ்துவனாக இருந்தபொழுது வேத புத்தகத்தை நன்றாகப் படித்திருந்தான். சுவாமியாராகப் போய்விட வேண்டுமென்று கத்தோலிக்க மதத்தைத் தழுவி, சுவாமியார் பரீட்சைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவிஸ் பிரதராக (Novice Brother) Father ஞானப்பிரகாசம் மேற்பார்த்த மடத்தில் இரண்டு வருஷங்கள் கழித்தான். சுற்றி நடக்கும் அபத்தங்களும், சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்குச் சற்றும் சாந்தி தராத இரும்புச் சட்டம் போன்ற கொள்கைகளும் அவன் மனத்தில் உலகக் கட்டுப்பாடே ஒரு பெரிய புரட்டு என்ற நம்பிக்கைகளைக் கிளப்பிவிட்டன.

அதனிடமும் விடை பெற்றுக்கொண்டு, திரு. ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுவிட்டான். அதிலே அவன் ஒரு பெரும் தீவிரவாதி. இப்பொழுது தோழர் நரசிங்கம் என்ற பெயருடன், தனக்குத் தோன்றிய உண்மைகளை அதில் ஒரு பைத்தியம் பிடித்ததுபோல், பிரசாரம் செய்து கொண்டு வந்தான்.

ஒரு தடவை தகப்பனாரைக் காண ஆதனூருக்கு வந்தான். பழைய எண்ணங்கள் குவிந்திருக்கலாம். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அவனுக்கு இரண்டு உண்மைகள் தெரிந்தன. தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இடையே எண்ணங்களில், செய்கைகளில் ஏன் எல்லாவற்றிலுமே ஒரு பெரிய பிளவு இருக்கிறது என்பது ஒன்று. இன்னும் ஒன்று, தான் சென்ற பிறகு, தனக்கு ஒரு அழகான

104

புதிய நந்தன்