உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வைப்பது போல் - இவனைக் கேட்காமலே பிரியப் போகிற இந்தப் பொக்கான உயிரை மட்டுமா? தனது சக்தி முழுவதையுமே வைத்துப் போராடினான். நான்கு வார்டர்களும் ஒரு சூப்பிரண்டும் எதிர்க்கும் பொழுது, அந்தச் சின்ன அறையில் எப்படிப்பட்ட சண்டைக்கும் ஒரே வித முடிவுதான் உண்டு. அதுதான் நடந்தது.

43-ம் நெம்பருக்குப் பலத்த காயம். புற உடம்பில் மட்டுமா? அது மட்டுமானால்தான் அதை ஒரு பொருளாக மதிக்க மாட்டானே? ஆத்மா, உலகம், இலட்சியம் எல்லாம் பறிபோனது போல் துடித்தான்; சோர்ந்தான். அந்தப் பெண் - தனது சிநேகிதை - வந்தால்... ஐயோ!... அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.

ஜெயில் ஆஸ்பத்திரியில் மருந்து போட்டார்கள். தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

அன்று சிநேகிதியைக் காண அனுமதிக்கவில்லை.

2

'நல்லார்... அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது ஒரு தத்துவப் பிரமை. இதற்கு எதிர்மறையாக, 'தீயார், அவர் பொருட்டாகச் சிலரை வலுவாகச் சிறைசெய்ய வேண்டியது' என்பது ஒரு சமூக உண்மை.

பரமேச்வரம் சூப்பிரண்டாக இருந்தாலும் அவரும் ஒரு சிறைவாசி தான். அந்தச் சமூக உண்மைக்கு உதாரணம். இவரும் அந்த ஜெயில் காம்பௌண்டிற்குள்ளேதான் நாள் முழுதும் குடியிருக்கிறார். இவரும் இஷ்டம்போல் அனாவசியமாகச் சுற்ற முடியாது. கைதிகளைக் காப்பதற்கு இவரும் சிறைவாசம் செய்யவேண்டியிருக்கிறது. இது பரமேச்வரத்திற்குத் தெரியாது; அவர் அதைப் பற்றி நினைத்ததே இல்லை.

பரமேச்வரத்திற்கும் மற்றக் கைதிகளுக்கும், இருக்கும் அறையைப் பற்றியமட்டில், வித்தியாசமுண்டு. சிறையிலே, ஏ கிளாஸ் பி கிளாஸ் இல்லையா? இதற்கெல்லாம் மேலாக ஜெயில் சூப்பிரண்ட் கிளாஸ் என்று வைத்துக்கொண்டால் போகிறது.

அன்று இரவு சூப்பிரண்ட் பரமேச்வரம் பிள்ளை பறிமுதலைப் பற்றி ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தார். எழுதியவர் 43 நெர். கைதி. தலைப்பு ஒன்றும் தெரியவில்லை. படித்துத்தான் ஆகவேண்டும்!

படிக்க ஆரம்பிக்கிறார்...

"நல்ல இருள்...
தொட்டால் கையில் கறுப்பு ஒட்டிக் கொள்ளும் மாதிரி.
அப்பொழுது நீ வந்தாய்.
இருளில் ஜோதிப் பிழம்பாக இருந்தாய்.
நீ யார்?

126

பறிமுதல்