உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதம்

சிங்கார வேலு ஓர் இலக்கிய கர்த்தா. வாழ்க்கையின் இலட்சியங்களை, வாழ்க்கையின் சிக்கல்களை - ஏன், வாழ்க்கையையே - திறந்து காண்பிக்கும் ஜன்னல்கள்தாம் சிறுகதைகள் என்றால் அவைகளுக்கு உதாரணம் சிங்கார வேலுவின் கதைகள்.

'பேனாவை வைத்துக்கொண்டு கோனாகிவிடுவோம்!' என்று அவர் ஒரு நாளும் கனவு காணவில்லை; ஆனால் பேனாவை வைத்துக் கொண்டு பிச்சையெடுக்க வேண்டும் என்று நினைக்கவும் இல்லை.

அவருடைய சிறுகதைகளைப் பொறுத்தவரை சமூகம் நூறு பேரில் அவரை ஒருவராக மதித்தது. முக்கால்வாசிப் பேருக்கு அழகு என்பது என்ன என்று தெரியாது. சிலருக்கு அழகாயிருக்கிறது என்று முதலில் சொல்லுவதற்குத் தைரியமில்லை.

இந்த மாதிரியான சமூகத்தினிடையே சிங்காரவேலு உயிர்வாழ வேண்டுமென்றால் வாழ்க்கை உண்ணாவிரதத்தில் முக்தியடைந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது கருணை மிகுந்த தெய்வம் அட்சய பாத்திரம் ஒன்றைக் கொடுத்து வைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும். இயற்கையின் சட்டத்தை மீறவும், தெய்வத்தின் கருணையைப் பெறவும் முடியாத இந்தக் கலிகாலத்தில் பிறந்ததைப் பற்றி சிங்கார வேலு நொந்து கொள்வதில் பயன் இல்லை.

அவருடைய சமூகமாகவும் ரஸிகர்களாகவும் சில நண்பர்கள் இருந்தார்கள். அதனால் அவருக்குப் பசி என்ற கவலை ஏறக்குறைய இல்லையெனலாம். ஏனென்றால் அவருடைய தேவைகள் வெகு கொஞ்சம். குடும்ப பாரம் கிடையாது. கனவு கண்டுகொண்டிருப்பதற்குப் போதிய அவகாசம் இருந்தது. எனினும் அதை இலக்கியமாக வடிவெடுக்க வைக்கும் ஊக்கம் குறைந்துவர ஆரம்பித்தது.

புகழ் இல்லாமல் இலக்கிய கர்த்தா உயிர் வாழ முடியாது. முகஸ்துதி வேண்டாம். இல்லாததை நீங்கள் சொல்லிவிட வேண்டாம். செய்வது சரிதான், நன்றாயிருக்கிறது என்று சொல்லவாவது வேண்டாமா? நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடச் சக்தியற்ற கோழையான ஒரு

136

கடிதம்