உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் தொந்திரவைக் கொடுத்தது. அவன் இல்லாவிட்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும் என்று பட்டது. அவன் எதிர்பார்க்காத பொழுது ஒரு தள்ளு தள்ளிவிடுகிறது இயற்கைதானே. அவ்வளவு தானே சுலோசனா! அவன் இல்லாவிட்டால் நல்லதுதானே."

விருந்தினர்கள் எல்லாரும் விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். சுலோசனாவின் முகத்தை கவனித்தவுடன் சிரிப்பு அடங்கிவிட்டது.

"நீங்கள் சொல்வது அர்த்தமாகவில்லை. யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்" என்றாள். முகம் பயத்தால் வெளிறி இருந்தது.

"அவனால் இடைஞ்சல்கள் அதிகமாக இருந்தது. அங்கு ஒருவரும் இல்லை. சான்ஸ் கிடைத்தால்... பிறகு என்ன?"

"அவர் மயங்கித்தான் விழுந்து உயிர் துறந்தார்."

"அவன் பயங்கொள்ளியல்ல தலை சுற்றிக் கீழே விழுவதற்கு. சரியாக ஒரு வருஷமாகிவிட்டது. அப்பொழுது சௌகரியமாகக் கீழே வந்து உன் கதையைச் சொன்னாய். உன்னைத் தடுத்து மறுத்துப் பேச அவன் அங்கு இல்லை."

"சத்தியமாக அவர் மயங்கித் தான் விழுந்துவிட்டார்."

"நிஜமாகவா? அவனை உன் முன்பு கொண்டுவந்து நிறுத்தினால் அப்படி சத்தியம் செய்வாயா?"

"உங்களால் அவரைக் கொண்டுவர முடியாது."

"கொண்டுவர முடியும். மகரம். மகரம். இங்கே வா!" என்று சற்று உரத்த சத்தத்தில் கூப்பிட்டார்.

எங்கும் நிசப்தம்.

பிறகு வெளியே டக், டக் என்று செருப்புச் சத்தம். யாரோ ஜன்னலைத் தட்டுவது மாதிரி...

"அவரை உள்ளே கூப்பிடவேண்டாம். நான் தான் கொன்றேன்... ஐயோ" என்று சொல்லிக்கொண்டே சுலோசனா மயங்கி விழுந்தாள்.

விளக்குகள் மறுபடியும் பிரகாசமாக எரிந்தன.

"ஜூரர்களே கைதி குற்றவாளியா அல்லவா" என்றார் லக்ஷ்மிகாந்தம்.


ஊழியன், 21.9.1934

180

'நானே கொன்றேன்!'